காஷ்மீர் உரி ராணுவ முகாம் மீதான தாக்குதல், எல்லை தாண்டிய தாக்குதல்களை கண்டித்தன ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

அதே சமயம், ரஷியாதான் பழங்கால நட்பு நாடு என்று ஜாடையாக சீனாவுக்கு புரியும் வகையிலும் மோடி பேசினார்.

வரவேற்பு

இந்தியா, பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்த உருவாக்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 8-வது உச்சி மாநாடு கோவாவில் இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் வந்த ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அதிபர் புதினை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இரு தலைவர்களும் ஏறக்குறைய 2 மணிநேரம் வரை பல்ேவறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

சகிக்கமாட்டோம்

அதன்பின், பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறுகையில், “ ரஷியா நாடு எங்களின் பழைமையான நட்பு நாடு. புதிதாக வந்துள்ள இரு நாடுகளைக் காட்டிலும், பழைய நண்பர் சிறந்தவர். இந்தியாவும், ரஷியாவும் தீவிரவாதத்தையும், தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டோம்.

ஆசியப் பிராந்தியத்தில் எல்லை தாண்டிய தீவிரவாதம், தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக நாங்கள் செய்து வரும் போராட்டத்துக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிக்கும் ரஷியாவை நாங்கள் வரவேற்கிறோம்.

வலிமை

இந்தியா மீது ஆழ்ந்த பாசமும், ஈர்ப்பும் ரஷியா வைத்திருப்பதை நாங்கள் உணர்கிறோம். அதிபர் புதினின் தனிப்பட்ட கவனம் தான் இரு நாடுகளின் நட்புறவின் மிகப்பெரிய வலிமையாகும். இரு நாடுகளின் கடந்த கால சாதனைகள் கொண்டாடப்படக்கூடியது. இந்த நட்பு என்பது, நிலைத்தன்மையையும், அமைதியையும் வழிநடத்திச்செல்லும் ஓட்டுநர் போன்றதாகும்.

உண்மையான நட்பு

மாறிவரும் சர்வதேசசூழல், குழப்பங்களுக்கு மத்தியிலும் இந்த நட்பு தொடர அதிபர் புதினின் நிலைத்தன்மை, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் முக்கியக் காரணமாகும். குறிப்பாக ஐ.நா., பிரிக்ஸ், கிழக்கு ஆசிய மாநாடு, ஜி-20, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு ஆகியவற்றிலும் இரு நாடுகளின் கூட்டுறவு இணைந்து செயல்பட்டு, சர்வதேச அளவில் உண்மையான நட்பை பிரதிபலிக்கிறது'' என்று தெரிவித்தார்.