மோடியின் பேச்சு தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது

மாயாவதி கிண்டல் பேச்சு

லக்னோ, ஜன. 4-

லக்னோ தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசிய விதத்தைக் கேட்கும் போது, அவர் தோல்வியைக் இப்போதே ஒப்புக்கொண்டு விட்டார் என்பதைத் தான் காட்டுகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்மாயாவதி கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி லக்னோவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

திசை திருப்பும்முயற்சி
ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்ட விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அவர் ஆட்சிக்கு வரும் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் கால்பகுதியைக் கூட நிறைவேற்றவில்லை. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கருப்புபணத்தை மீட்பேன் என்று கூறியதை செயல்படுத்தவே இல்லை.

தோல்வி முகம்

லக்னோவில் நேற்று முன் தினம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டது போலவே பேசினார். இதில் இருந்து உத்தரப்பிரதேச்தில்பாரதிஜனதா ஆட்சிக்கு வராது என்பது தெரிகிறது.

கலையழந்த முகம்

மோடி தான் பேசும் போது, அடிக்கடி, ேதர்தலில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல; பொறுப்புதான் முக்கியம் என்று தொண்டர்களுக்கு கூறினார். மோடி, பா.ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா முகமும் கலை இழந்துகாணப்பட்டதில் இருந்தே தோல்வி உறுதியாகிவிட்டது தெரிந்தது. ஏனென்றால், அந்த கட்சியின் தலைவர்கள் பேசிய விதமும், அவர்களின் பேச்சுகளும் மாநிலத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்தே பேசினர்.

சாதிக்கட்சி அல்ல

பகுஜன் சமாஜ் கட்சியை சாதி ரீதியான கட்சி என்று கூறி அரசியல் சதி செய்கிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சியை சாதிக்கட்சி என்று தவறான குற்றச்சாட்டைக் கூறுகிறார்கள். அதாவது, தலித் மக்களைத் தவிர மற்ற வகுப்பினர் வாக்களிக்காதீர்கள் என்று கூறி சதி செய்கிறார்கள்.

அனைத்து தரப்புக்கும் குரல்

கடந்த 4 அரசுகளின் ஆட்சியிலும் பகுஜன் சமாஜ் கட்சி தலித்துகள் தவிர்த்து, அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டுள்ளது. பொருளாதார அடிப்படையில் உயர்சாதியினருக்கும் இட ஒதுக்கீடு கேட்டு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல்கொடுத்த கட்சி பகுஜன் சமாஜ். 

அதற்கு சமீப உதாரணம், எங்கள் கட்சி அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த தேர்தலில் போட்டியிட சரிசமமான வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது.

நியாபகம் இருக்கா?
புத்தாண்டு உரையாற்றி மோடிக்கு சில விஷயங்களை நினைவூட்ட விரும்புகிறேன். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் கருப்புபணத்தை மீட்டு ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என உறுதி அளித்தீர்கள். அந்த பொறுப்பு உணர்வோடு நடந்து கொண்டாரா என்பதை சிந்திக்க வேண்டும். 

பிரதமர் மோடி ரூபாய் நோட்டு தடை செய்த அறிவிப்பை யாராலும் மறக்க முடியாது. இது கருப்புபக்கம். 90 சதவீத மக்களையும் துயரத்தில் ஆழ்த்திய முடிவு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.