கருப்பு பணத்திற்கு எதிராகப் போராட வருமாறு இளைஞர்களுக்கு மோடி அழைப்பு! 

கருப்பு பணத்திற்கு எதிராகப் போராட வருமாறு இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை ஒட்டி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மையத்தில் 21வது தேசிய இளைஞர் விழாவை வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

பின்னா், உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ரொக்கப் பணம் இல்லாத பணப் பரிமாற்றத்தை நோக்கி இந்தியாவை அழைத்துச் செல்வதற்கு, இளைய தலைமுறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். 

தொடக்கத்தில் தமிழிலில் பேசிய மோடி, விவேகானந்தரின் இந்த பூமி தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தமிழர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இதே போல் ஹரியானா மாநிலம் ரோஹடக்கில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் உரையாற்றிய மோடி, 35 வயதுக்குட்பட்ட 80 கோடி பேர் இந்தியாவில் இருப்பதாகவும், அவர்கள் சமூக மாறுதலுக்கு உடனடியாக பங்காற்ற முடியும் என்றும் கூறினார்.

சாதிமத வேறுபாடுகள், கருப்பு பணம் மற்றும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடுமாறு இளைஞர்களுக்கு மாேடி அழைப்பு விடுத்தார். கருப்பு பணம் நாட்டை சீரழித்துவிட்டதால் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்றும், அதை வெற்றிகரமாக்க இளைஞர்கள் தங்களது சக்தியை செலுத்த வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டார்.

பாதை தவறாமல் உயர்ந்த இலக்குகளை எட்டுவதற்கு இளைஞர்களின் ஆற்றலை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.