Asianet News TamilAsianet News Tamil

சொர்கத்திற்கு போக ஆசை படவில்லை ,ஏழைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் ;தேசிய செயற்குழு கூட்டத்தில்மோடி பேச்சு

modi speaks-in-bjp-national-council-meeting
Author
First Published Jan 7, 2017, 11:01 PM IST


ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பா.ஜனதா அரசு முன்னுரிமை வழங்கும் என்று, கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அறிவித்தார்.

பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று முடிவடைந்தது.

கடவுளுக்கு சேவை

modi speaks-in-bjp-national-council-meeting

நிறைவு நாளான நேற்று, பிரதமர் மோடி கூட்டத்தில் உரையாற்றினார். அவருடைய 50 நிமிட உரையில் ஏழை மக்களின் தரத்தை உயர்த்துவதே மையக்கருத்தாக அமைந்து இருந்தது. அவர் கூறியதாவது-

‘‘ஏழைகளுக்கு சேவை செய்வது என்பது கடவுளுக்கு சேவை செய்வதைப் போன்றதாகும்.

துயரங்களுக்கு முடிவு

ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்காகவோ, சொர்க்கத்துக்குப் போவதற்கோ அல்லது இரண்டாவது ஒரு பிறவி வேண்டும் என்பதற்காகவோ நான் ஆசைப்படவில்லை.

ஆனால், மக்களின் துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகிறேன்.

வாழ்க்கைத் தரம்

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட வரலாற்று முடிவை நமது நாட்டின் ஏழை மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஊழல் உள்ளிட்ட சமூகத் தீமைகளுக்கு முடிவு கட்டுவதற்கான சிறந்த நடவடிக்கை இது என்பதை அவர்கள் புரிந்து இருக்கிறார்கள்.

இதனால், இதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை பொருத்துக்கொண்டு, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை பெரிய அளவில் உயர்த்தப்போகும் இந்தத் திட்டத்தை அவர்கள் வரவேற்று உள்ளனர். கடந்த இரு மாதங்களாக, மக்கள் பலத்தை இந்த நாடு பார்த்து வருகிறது.

முன்னுரிமை

சிலர் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது பற்றித்தான் கவலைப்படுவார்கள். ஆனால், எங்களுடைய அரசு ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவே முன்னுரிமை வழங்கும்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே ஏழைகள் தேவை என்ற நோக்கத்தில் பா.ஜனதா தொண்டர்கள் அவர்களைப் பார்க்கக் கூடாது. அவர்கள் கையில் அதிகாரம் கிடைக்கச் செய்யும் பாதையில் நாம் நடை போட வேண்டும்.

5 மாநில தேர்தல்

உ.பி. உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி உறுதியாகிவிட்டது. இதற்காக பா.ஜனதா தொண்டர்கள் வாக்குச் சாவடி மட்டத்தில் இருந்து கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு மோடி கூறினார்.

தேர்தல் சீர்திருத்தம்

அவர் மேலும் பேசுகையில் நாட்டில் தேர்தல் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதில் பா.ஜனதா ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

உறவினர்களுக்கு டிக்கெட்

கூட்டத்தில் மோடி ஆற்றிய உரை குறித்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பின்னர் நிருபர்களிடம் விளக்கிக் கூறினார். பா.ஜனதா கட்சியின் அடுத்த தேசிய செயற்குழு, ஏப்ரல் 15, 16 ஆகிய தேதிகளில் கூடும் என்றும் அவர் அறிவித்தார்.

பா.ஜனதா தலைவர்கள் தங்கள் உறவினர்களுக்கு தேர்தலில் டிக்கெட் கேட்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பதை கட்சி பார்த்துக்கொள்ளும் என்று கண்டிப்பாக கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios