கூடங்குளத்தில் 3-வது, 4-வது அணு உலைகள் கட்டுமானத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் புதினும் கோவாவில் இருந்தவாறே கானொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினர்.
கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மொகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணு உலையில் இருந்து கடந்த ஆண்டில் வர்த்தகரீதியான மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இதேபோல் 2-வது அணு உலையிலும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.
இந்த வளாகத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள மேலும், 2 அணு உலைகள் அமைப்பதற்கு கடந்த ஜனவரி 22-ந்தேதி இந்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் அனுமதி அளித்தது. இதையடுத்து இந்த அணு உலையை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி பூமி பூஜையுடன் தொடங்கின.

இந்நிலையில், இந்திய அணுசக்தி கழகம் ரூ. 39 ஆயிரத்து 747 கோடி மதிப்பில் 3-வது, 4-வது அணு உலைகளை அமைக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது. இந்த அணு உலைகளில் இருந்து வரும் 2022-ம் ஆண்டில் மின் உற்பத்தி தொடங்க உள்ளது.
இந்த 3-வது, 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடந்தது. கோவாவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த ரஷிய பிரதமர் விளாதிமிர் புதினும், பிரதமர் மோடியும் பெனாலிம் நகரில் இருந்தவாறே கானொலிக் காட்சி மூலம், இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “ ரஷியாவுடன் இணைந்து 8 புதிய அணு உலைகள் அமைப்பதற்கான திட்டங்கள் போடப்பட்டுள்ளன'' என்ற தெரிவித்தார்.
முதலாவது அணு உலையில் இருந்து இதுவரை 12 ஆயிரத்து 500 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
