சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கான ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டத்தின் விமானி சுபான்ஷு சுக்லாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். ககன்யான் திட்டம் குறித்து இருவரும் விரிவாகப் பேசினர்.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கான (ISS) ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டத்தின் விமானி சுபான்ஷு சுக்லாவை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தனது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, ககன்யான் திட்டம் குறித்து இருவரும் விரிவாகப் பேசினர். சுக்லாவை ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி, அவரது தோளில் கைவைத்து நடந்து சென்றார்.
பிரதமருக்குப் பரிசளித்த சுக்லா
சந்திப்பின்போது, சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்திற்கான இலச்சினையையும் (patch), சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட புவியின் புகைப்படங்களையும் பிரதமரிடம் வழங்கினார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தியா திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "சுபான்ஷு சுக்லாவுடன் சிறப்பாக உரையாடினேன். விண்வெளியில் அவரது அனுபவங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், அத்துடன் இந்தியாவின் லட்சியமான ககன்யான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அவரது சாதனை குறித்து இந்தியா பெருமை கொள்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சுக்லாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக, நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது.
ககன்யான் திட்டம்
சுபான்ஷு சுக்லா ஜூலை 15-ஆம் தேதி தனது 18 நாட்கள் ஆக்ஸியம்-4 திட்டத்தை நிறைவு செய்தார். சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில், மூன்று குழு உறுப்பினர்களுடன் இணைந்து 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். இது, ககன்யான் திட்டத்தின் கீழ் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் லட்சியத்திற்கு ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், சுக்லாவின் சாதனைகளையும், இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளித் திறன்களையும் பாராட்டும் விதமாகவே இந்தச் சிறப்பு விவாதம் நடத்தப்பட்டதாகக் கூறினார்.
