பூமிக்குத் திரும்பியதும் மனைவி, மகனைச் சந்தித்த சுபான்ஷு சுக்லா! வைரல் போட்டோஸ்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பினார். விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாட்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பிய இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சியான தருணத்தின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
மனைவி, மகனைச் சந்தித்த சுபான்ஷு சுக்லா
ஜூலை 15ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் மற்றும் ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஹூஸ்டனில் உள்ள ஆரம்ப மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்ட பிறகு, அவரது குடும்பத்தினர் அவரை சந்தித்தனர்.
விண்வெளியிலிருந்து திரும்பியதும் முதல் முறையாக கணவரைச் சந்தித்த சுபான்ஷு சுக்லாவின் மனைவி காம்னா, அவரை கண்ணீர் மல்க இறுக்கமாக அணைத்துக்கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சுக்லா தனது நான்கு வயது மகன் கியாஷையும் தூக்கி வைத்து ஆரத் தழுவினார். விண்வெளி பயணத்திற்கு முன்பு ஒரு மாதத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு தனது குடும்பத்தினரை சந்தித்துள்ளார் சுபான்ஷு சுக்லா. ஆரம்பத்தில் 15 நாட்கள் தனிமைப்படுத்தல் தொடங்கிய நிலையில், அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் விண்வெளிப் பயணம்
சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வலம் வந்த முதல் இந்தியர் மற்றும் 1984 ஆம் ஆண்டு ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற வகையில் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
விண்வெளி நிலையக் குழுவினரால் "ஷக்ஸ்" (Shux) என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட சுபான்ஷு சுக்லா, இந்திய நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் பூமிக்குப் புறப்பட்டார். 22 மணிநேரப் பயணத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்பினார்.
விண்வெளியில் சுபான்ஷு சுக்லாவின் ஆய்வுகள்
விண்வெளியில் இருந்தபோது, சுபான்ஷு சுக்லா உயிரியல், பொருள் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல சர்வதேச அறிவியல் சோதனைகளில் முக்கியப் பங்காற்றினார். அவற்றில், நுண் ஈர்ப்பு விசையின் கீழ் தாவர வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்யும் "ஸ்ப்ரௌட்ஸ் ப்ராஜெக்ட்" (Sprouts Project) அவரது பணி, விண்வெளியில் நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்கான நம்பிக்கையை அளிக்கிறது.
சுபான்ஷு சுக்லாவின் இந்த சாதனை, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அவரது பயணம், ககன்யான் போன்ற இந்தியாவின் எதிர்கால மனித விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு உத்வேகமளிப்பதாக அமைந்துள்ளது. அவரது வெற்றிக்காக நாடே பெருமை கொள்கிறது.