பிரதமர் மோடி தலைமையிலான அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்யும் என்று கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

கோவா தலைநகர் பானாஜி நகரில் பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பேசுகையில்;- வரும் நாட்களில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஏராளமான முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது. அவை அனைத்தும் ஆலோசனைகள் நிறைவு பெற்று தயார் நிலையில் உள்ளன. 

அதன்பிறகு, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு மாற்றாக எந்த அரசும் வர முடியாது. மாநிலத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சேர்க்கை திட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் நாட்டை ஆட்சி செய்யும் என்று நாட்டு மக்கள் நம்புகிறார்கள். உண்மையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி தான் நாட்டை ஆள வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். 

மத்தியப் பிரதேச மக்கள், சிவராஜ் சிங் சவுகானையும் அவரது ஆட்சியையும் தவற விட்டுள்ளனர். விரைவில் அங்கு மீண்டும் சிவராஜ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.