வினோத மூளை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சாவின் விளிம்பில் இருக்கும் 12 வயது சிறுவனுக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்க பிரதமர் மோடி உதவி செய்துள்ளார். மேலும், அந்த சிறுவனின் தந்தைக்கு தனிப்பட்ட முறையில் கடிதத்தையும் மோடி எழுதியுள்ளார்.

மூளைச்சிதைவு நோய்

குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பார்த். இவருக்கு  உயிர்கொல்லி வைரஸ் தொற்று மற்றும் மூளைச் சிதைவு நோய் கடந்த 4 மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிறுவனின் தந்தை தன்னிடம் உள்ள சேமிப்பு, வீட்டில் இருந்த நகைகள், சொத்துக்களை அனைத்தையும் விற்பனை செய்து தனது ஒரே மகனுக்காக சிகிச்சை அளித்தார். அவரிடம் தனது மகனுக்கு நீண்ட நாட்களுக்கு மருத்துவம் பார்க்க போதுமான பணம் இல்லை.

பிரதமருக்கு கடிதம்

இதையடுத்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத தீர்மானித்து, தனது மகனின் நிலை குறித்து மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால், எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியிடம் இருந்து கடிதம் வந்தது. அவரின் மகனுக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ளார்.

பணம் இல்லை

இது குறித்து அந்த சிறுவனின் தந்தை கூறுகையில், “ கடந்த 4 மாதங்களுக்கு முன், எனது மகனுக்கு மூளைச்சிதைவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனது சொத்துக்களை முழுவதையும் விற்று மருத்துவம்செய்தேன்.

கடிதமும், உதவியும்

அதன்பின், பிரதமர் மோடியிடம் உதவி கேட்டு கடிதம் எழுதினேன். ஆனால்,மோடியிடம் இருந்து பதில் கடிதம் வரும் என எதிர்பார்க்கவில்லை. அவரிடம் இருந்து ஆறுதல் கடிதமும், எய்ம்ஸ் மருத்துவமனையில் எனது மகனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், மருத்துவ சிகிச்சைக்கான அனைத்து நிதி உதவிகளையும் அளிக்கப்படும் என்ற கடிதமும் இருந்தது.

அதன்பின் எனது மகன்  எய்ம்ஸ் மருத்துவனையில் சேர்த்தேன் இப்போது அங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி நிதி உதவி மட்டும் அல்லாது, தார்மீக ரீதியான ஆதரவும் அளித்துள்ளார்'' என்றார்.

தீவிர சிகிச்சை

எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நரம்பியல் பிரிவு டாக்டர் ஷெபாலி குலாத்தி கூறுகையில், “ பர்த்துக்கு வந்துள்ளது மூளை சிதைவு நோய். எங்களால் முடிந்தவரை சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம். இப்போது அனைத்து சோதனைகளும் முடிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

பாக்ஸ் மேட்டர்...

மோடிக்கு முதல்முறை அல்ல...

பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி சிறுவனுக்கு உதவுவது முதல் முறை அல்ல. இதற்கு முன், உத்தரப்பிரதேசம் உன்னவ்நகரைச் சேர்ந்த 11-வயது சிறுவன் ஒருவன், தான் பள்ளிக்கு போகும் போது ரெயில்வே கேட் இல்லாததால் பாதையை கடந்து செல்வதில் சிரமம் இருப்பதாக கூறி மோடிக்கு கடிதம் எழுதியிருந்தான். அதற்கு உடனடியாக பதில் அளித்த பிரதமர் மோடி ரெயில்வே துறைக்கு கடிதம் எழுதி அங்கு கேட் அமைக்க உத்தரவிட்டார்.

இதேபோல ஆக்ராவைச் சேர்ந்த ஒரு சிறுமி தனது இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி கோரி மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு உடனடியாக கடிதம் எழுதிய மோடி, டெல்லி ஜி.பி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.