பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம் குடும்ப சட்ட வாரியம் கடும் கண்டனம்
புதுடெல்லி, அக். 14:-
மத்திய சட்ட ஆணையம் பொதுசிவில் சட்டம் குறித்து மக்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முஸ்லிம் குடும்ப சட்ட வாரியம், உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், ‘ முஸ்லிம் சமூகத்தின் மீது மோடி அரசு தொடுக்கும் போர் என பொது சிவில் சட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
ஆதரவு
மத்திய அரசு நாடுமுழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக சட்ட ஆணையத்தின் மூலம் அறிவிக்கை வெளியிட்டு, பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது. இந்த சட்டத்துக்கு சிவசேனா, இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
எதிர்ப்பு
அதேசமயம், காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் எதிர்த்து வருகின்றன. முஸ்லிம் குடும்ப சட்டவாரியம், முஸ்லிம் அமைப்புகளும் தங்களுக்கே உரிய ஷரியத் சட்டத்துக்கு மாறாக கொண்டுவரப்படும் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
பேட்டி
இது குறித்து அனைத்து இந்திய முஸ்லிம் குடும்ப சட்டவாரியத்தின் பொதுச்செயலாளர் வாலி ரஹ்மானி, ஜமாத் உலேமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்சத் மதானி, மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அச்சுறுத்தல்
அப்போது குடும்நல சட்டவாரியத்தின் பொதுச்செயலாளர் வாலி ரெஹ்மானி கூறுகையில், “ பொதுசிவில் சட்டத்தை நாட்டில் அமல்படுத்தினால், அனைத்து மக்கள் மீதும் ஒரேமாதிரியான வண்ணம் பூசப்பட்டு, நாட்டின் பன்முகத்தன்மைக்கும், வேற்றுமையில் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகும்.
பிரசாரம்
இந்த பொது சிவில் சட்ட விஷயத்தில் நாடுமுழுவதும் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும், பெண்களும் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். இந்த சட்டம் கொண்டுவரப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முஸ்லிம் மக்களிடையே இன்றுமுதல் விழிப்புணர்வு பிரசாரம் லக்னோவில் இருந்து தொடங்கப்படும்.
ஒரே வண்ணம்
நாடு எல்லையில் தீவிரவாத பிரச்சினை, தீவிரவாத தாக்குதல் என பல பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் அதில் கவனம் செலுத்தாமல் மத்திய அரசு திசை திருப்புகிறது. இந்த பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால், நாட்டின் பன்முகத்தன்மை முடிவுக்கு வந்து, அனைவரின் முகத்திலும் ஒரே வண்ணம் பூசப்படும்.
மூன்றுமுறை தலாக் சொல்லும் முறைக்கு மத்தியஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகதத்தைக் காட்டிலும், இந்து சமூகம் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களில்தான் அதிகமான விவகாரத்துக்கள் ஆண்டு தோறும் நடக்கின்றன. இதுகுறித்து கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
விரும்பவில்லை
எங்கள் சட்டங்களில் குறைபாடுகள் இருந்தால், அவ்வப்போது அது குறித்து கலந்து பேசி களைந்து வருகிறோம். அதற்காக மூன்றுமுறை தலாக் செய்யும் முறையை நீக்கவும் விரும்பவில்லை'' எனத் தெரிவித்தார்.
பாக்ஸ் மேட்டர்...
காங்கிரஸ்
பொதுசிவில் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துவது நாட்டில் சாத்தியமில்லாத ஒன்று. அது நாட்டின் பன்முகத்தன்மையை குலைத்துவிடும்.
ஐக்கிய ஜனதா தளம்
மோடி தலைமையிலான மத்தியஅரசு, அடுத்து ஆண்டு நடக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு மக்களை பிளவுபடுத்தும் செயலை செய்ய முயல்கிறது.
அசாசுதீன் ஓவாய்சி
அனைத்து இந்திய மஸ்ஜிஸ் இ இதாஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாசுதீன் ஓவாய்சி கூறுகையில், “ பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதன் மூலம், நாட்டின் பன்முகத்தன்மை, மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையை கொலை செய்யப்படும். இது தொடர்பாக கருத்துக் பகிர்வில் எங்கள் கட்சி தகுந்த பதில் அளிக்கும். இந்த சட்டம் கொண்டுவருவதன் நோக்கமே மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதுதான்'' எனத் தெரிவித்தார்.
பா.ஜனதா
பாரதியஜனதா தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறுகையில், “ உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், பொதுசிவில் சட்டம் குறித்து அனைத்து தரப்பினரிடம் சட்ட ஆணையம் கருத்துக் கேட்டுள்ளது. இப்போது முஸ்லிம் குடும்ப சட்டவாரியம் தங்களை இதில் கருத்து தெரிவிக்கும் அமைப்பாக கருதுகிறதா அல்லது தனி அமைப்பாக கருதுகிறதா. குடும்ப சட்ட வாரியம் என்பது தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்தால் என்னால் ஒன்றும் செய்யமுடியாத.நாங்கள் முன்னேறிய சமூகத்தை உருவாக்க முயற்சிக்கிறோம்'' என்று தெரிவித்தார்.
சிவசேனா
சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் கூறுகையில், “ தேசிய நீரோட்டத்தில் இருந்து எத்தனை நாட்களுக்கு முஸ்லிம்கள் விலகி இருப்பார்கள். முஸ்லிம் சட்டவாரியம் பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு அளித்து சமூகத்துக்கு உதவ வேண்டும். குறிப்பாக முஸ்லிம் பெண்களை துயரத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். நாடுமுழுவதும் ஒரே சட்டம் என்பது எங்கள் கொள்கை'' எனத் தெரிவித்தார்.
