6 மாதத்திற்கு முன்பு போட்ட பிளான்..! கடைசி நிமிடத்தில் போட்டுடைத்து எல்லோரையும் மண்டை காயவிட்ட மோடி..!  

வரும் மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், நூலிழையில் தான் வெற்றி வாய்ப்பை தவற விட்டது பாஜக. இந்த நிலையில் பிரதமர் மோடி பல அதிரடி அறிவிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்து வருகிறார். அதன்படி ரூபாய் 5 லட்சத்திற்கான  மெடிக்கல் இன்சூரன்ஸ்  கார்டு முதல் தற்போது  இட ஒதுக்கீடு வரை எடுத்துக்கொள்ளலாம்.

10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முடிவை பிரதமர் மோடி ஆறு மாதத்திற்கு முன்பாகவே முடிவு எடுத்து வைத்திருந்தாராம். ஆனால்  இந்த தகவல் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இவர்களை தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாது. காரணம், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் கடந்த 7ஆம் தேதி  நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இறுதி செய்யப்படும் வரை இடஒதுக்கீடு முடிவு குறித்த தகவல் கசிய விடாமல் பாதுகாத்து வந்துள்ளார் மோடி.

மேலும் இது குறித்த வரையறையை சமூக மற்றும் நீதித்துறை அமைச்சகத்திடம் ஆறு மாதத்திற்கு முன்னதாகவே  கொடுக்கப்பட்டு  உள்ளது என்பது கூடுதல் தகவல். மேலும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி  பிரிவை பாதிக்காத வகையிலும், மற்ற  உயர் பிரிவை சார்ந்தவர்களும் பயன்பெறும் வகையிலும் இட ஒதுக்கீடு பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது என்பது வரவேற்க தக்க விஷயம்.

ஒரு வேளை எஸ்.டி அல்லது எஸ்.சி பிரிவில் இட ஒதுக்கீட்டை குறைத்தோ அல்லது சிறிய மாற்றம் கொண்டு வந்திருந்தால், இந்த திட்டத்திற்கு மூச்சு விடாமல் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்திருக்கும்.

ஆனால், இந்த10 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மற்ற உயர் பிரிவை சார்ந்தவர்களும் கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை அனைத்திலும் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவில் இடஒதுக்கீடு பாதிக்காத வகையிலும், அதே நேரத்தில் மற்ற உயர் வகுப்பை சார்ந்தவர்களும் பயன்பெறும் வகையில், இந்த திட்டத்தை கொண்டு வந்ததால் எதிர்க்கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்காதபடி நல்ல திட்டத்தை கொண்டு வந்துள்ளார் மோடி.