modi controversial talk on manmohan
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆகியோரை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் மோடியின் கருத்து தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலின்போது பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.
பாகிஸ்தான் தூதர்
அப்போது அவர், ‘‘அகமது பட்டேலை குஜராத் முதல் அமைச்சராக்க பாகிஸ்தான் உளவுத்துறையில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர்கள் பரிந்துரை கடிதம் எழுதி வருவது ஏன்? என்னை இழி பிறவி என்று கூறியதன் மூலம் குஜராத் மக்களை அவமதித்த மணி சங்கர அய்யர் பாகிஸ்தான் தூதரை ரகசியமாக சந்தித்தது ஏன்? என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
மணி சங்கர அய்யர் வீட்டில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ரகசிய கூட்டத்தில் பாகிஸ்தான் உயர் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னிப்பு
குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த பாகிஸ்தான் உளவு அமைப்புடன் சதி செய்ததாக அவதூறான வகையில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி இருந்தார்.
ஒரு வாரமாக அமளி
அரசியல் ஆதாயத்துக்காக பிரதமர் மோடி பரப்பிவரும் தவறான புனைக்கதைகளால், தான் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சனையை மையமாக வைத்து பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கடந்த ஒருவார காலமாக அமளி நடப்பதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு காங்கிரஸ் எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் காணப்படவில்லை.
அருண்ஜெட்லி விளக்கம்
இந்நிலையில், நேற்று பிற்பகல் மாநிலங்களவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோர் நாட்டுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பை கேள்விகுறியாக்கும் எண்ணம் பிரதமர் மோடிக்கு கிடையாது என்றும், அப்படி உருவாக்கப்பட்ட எண்ணம் மிக தவறானதாகும் என்று அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.
