பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி காங்கிரஸை துப்பாக்கி முனையில் மிரட்டி முதல்வர் பதவியை வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். என்டிஏ ஆட்சியில்தான் பீகார் வளர்ச்சி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி காங்கிரஸ் கட்சியை துப்பாக்கி முனையில் மிரட்டி முதல்வர் பதவியை வாங்கியுள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்க்கட்சியான மகாகத்பந்தனை (மகா கூட்டணி) கடுமையாகத் தாக்கிப் பேசினார். ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே பிளவு இருப்பதாகவும், இந்து பாரம்பரியங்களை அவை இழிவுபடுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பீகாரின் அர்ரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை, ஆனால் நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒப்புக்கொண்டதாகக் குற்றம் சாட்டினார்.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ஆர்ஜேடி

"ஆர்ஜேடி வேட்பாளரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால் ஆர்ஜேடி, காங்கிரஸை துப்பாக்கி முனையில் மிரட்டி முதலமைச்சர் பதவியை உறுதி செய்தது...” என்று மோடி குறை கூறினார்.

மேலும், “ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுக்கு இடையே பெரிய மோதல் உள்ளது. தேர்தல் அறிக்கையில் காங்கிரஸின் கோரிக்கைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. தேர்தல் முடிவதற்கு முன்பே இவர்களுக்குள் இவ்வளவு வெறுப்பு இருக்கிறது, தேர்தல் முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் பழிவாங்குவார்கள். இவர்களை நம்ப முடியாது." என்று மோடி விமர்சித்தார்.

இந்து மத நம்பிக்கைக்கு அவமதிப்பு

"நமது நம்பிக்கையை அவமதிப்பதில் ஆர்ஜேடி-காங்கிரஸ் தலைவர்கள் வல்லுநர்கள். ஆர்ஜேடி தலைவர்கள் பிரயாக்ராஜ் கும்ப மேளாவை 'பயனற்றது' ('faltu') என்று சொன்னார்கள். அதேசமயம், ஒரு காங்கிரஸ் தலைவரின் வாரிசு 'சத் மகா பர்வம்' ஒரு நாடகம் என்று கூறினார்." என்று மோடி கடுமையாகச் சாடினார்.

"நமது நம்பிக்கையை அவமதிப்பவர்களை பீகார் ஒருபோதும் மன்னிக்காது. நமது நம்பிக்கையை அவமதிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், அதன்மூலம் வேறு யாரும் மீண்டும் 'சத் மகா பர்வம்' பண்டிகையை அவமதிக்கத் துணிய மாட்டார்கள்," என்றும் அவர் வலியுறுத்தினார்.

மின்கம்பிகளில் துணி காயப்போட்ட பீகார் மக்கள்

பீகாரின் வளர்ச்சி தடைபடாமல் இருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) உறுதியான ஆதரவை அளிக்க வேண்டும் என்று வாக்காளர்களை மோடி கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, பிரதமர் மோடி ககாரியாவில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, பீகார் மின்சாரத் துறையின் நிலை மின் கம்பிகளில் மக்கள் துணிகளை உலர்த்தும் அளவுக்கு இருந்தது. மின்சாரம் கட்டாயம் வராது என்ற உறுதியுடன் மக்கள் துணிகளை மின்கம்பிகளில் காயப்போட்டனர், என்டிஏ ஆட்சியில்தான் அதை மாற்றியிருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.

பீகார் சட்டமன்றத்தின் 243 உறுப்பினர்களுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், இரு கூட்டணிகளும் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.