ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பீகார் முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 32% பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். மேலும், 40% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.

பீகார் தேர்தலில் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி (Criminal Background) மற்றும் சமூகத்தில் செல்வாக்கு (Financial Influence) குறித்த அதிர்ச்சித் தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் பீகார் தேர்தல் கண்காணிப்புக் குழு (BEW) ஆகியவை வெளியிட்டுள்ளன.

தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்காகப் பணியாற்றும் இந்த இரண்டு தன்னார்வ நிறுவனங்களும், நவம்பர் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் 121 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் 1,314 வேட்பாளர்களில் 1,303 பேரின் பிரமாணப் பத்திரங்களை (Self-sworn affidavits) ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

கிரிமினல் வழக்குகளில் சிக்கிய வேட்பாளர்கள்

அறிக்கையின்படி, ஆய்வு செய்யப்பட்ட 1,303 வேட்பாளர்களில் 423 பேர் (32%) தங்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களில், 354 பேர் (27%) மீது கொலை, கொலை முயற்சி போன்ற கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. குறிப்பாக, 33 வேட்பாளர்கள் கொலை (Murder) வழக்குகளிலும், 86 வேட்பாளர்கள் கொலை முயற்சி (Attempt to Murder) வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்துவதில் இடதுசாரி கட்சிகள் (Left parties) முன்னிலையில் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) ஆகியவை தங்களது 100% வேட்பாளர்களும், சிபிஐ (எம்எல்) கட்சி (CPI(ML)) 93% வேட்பாளர்களும் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

முக்கியக் கட்சிகளில், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) 76% குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 65%, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) (LJP Ram Vilas) 54%, ஜே.டி.யு (JDU) 39%, ஆம் ஆத்மி கட்சி (AAP) 27% வேட்பாளர்கள் குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர். தேர்தல் சீர்திருத்தங்களை வாக்குறுதி அளித்து முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிடும் ஜன் சுராஜ் (Jan Suraaj) கட்சியும் கூட 44% (114-ல் 50 பேர்) குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் பணம் செலுத்தும் செல்வாக்கு

தேர்தல் செயல்முறைகளில் பணத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 1,303 வேட்பாளர்களில் 519 பேர் (40%) கோடீஸ்வரர்கள் ஆவர்.

முக்கியக் கட்சிகளில், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் (RJD) அதிகபட்சமாக 97% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து பாஜக-வில் 92%, ஐக்கிய ஜனதா தளத்தில் (JD(U)) 91%, காங்கிரஸில் 78%, லோக் ஜனசக்தி கட்சியில் (ராம் விலாஸ்) 77%, ஜன் சுராஜ் கட்சியில் 71%, சிபிஐ(எம்) கட்சியில் 67% மற்றும் சிபிஐ கட்சியில் 60% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். சிபிஐ(எம்எல்) கட்சியில் இது மிகக் குறைவாக 14% ஆக உள்ளது.

வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

• ஜன் சுராஜ் கட்சி (114 வேட்பாளர்கள்): சராசரி சொத்து ₹5.72 கோடி

• பகுஜன் சமாஜ் கட்சி (BSP) (89 வேட்பாளர்கள்): சராசரி சொத்து ₹1.77 கோடி

• ராஷ்டிரிய ஜனதா தளம் (70 வேட்பாளர்கள்): சராசரி சொத்து ₹10.37 கோடி

• ஐக்கிய ஜனதா தளம் (57 வேட்பாளர்கள்): சராசரி சொத்து ₹8.75 கோடி

• பாரதிய ஜனதா கட்சி (48 வேட்பாளர்கள்): சராசரி சொத்து ₹11.30 கோடி

மற்ற கட்சிகளில், ஆம் ஆத்மி கட்சியின் (44 வேட்பாளர்கள்) சராசரி சொத்து ₹1.57 கோடி, காங்கிரஸின் (23 வேட்பாளர்கள்) ₹5.85 கோடி, சிபிஐ (எம்எல்) (14 வேட்பாளர்கள்) ₹81.57 லட்சம், லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) (13 வேட்பாளர்கள்) ₹10.88 கோடி, சிபிஐ (5 வேட்பாளர்கள்) ₹4.83 கோடி மற்றும் சிபிஐ(எம்) (3 வேட்பாளர்கள்) ₹1.73 கோடி என ADR அறிக்கை தெரிவித்துள்ளது.