பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, மோடி-நிதிஷ் குமார் ஆட்சியின் வளர்ச்சிப் பணிகளை எடுத்துரைத்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் மக்கள் மட்டும் இந்த ஆண்டு நான்கு முறை தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பீகாரில் நவம்பர் மாதம் 6 மற்றும் நவம்பர் மாதம் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, சரண் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், "இந்த வருடம் பீகார் மக்கள் நான்கு தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். அதில் ஒன்று, பெண்கள் வங்கி கணக்குகளில் ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டது. மற்றொன்று, ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது. மூன்றாவது, நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள்," என்று தெரிவித்தார்.

வளர்ச்சிப் பணிகள்:

பீகாரில் ஏராளமான கட்டமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றும், பீகாரில் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு பயணிக்க ஐந்து மணி நேரம் கூட ஆவதில்லை என்றும் அமித் ஷா குறிப்பிட்டார். இந்த வளர்ச்சி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரால் இணைந்து செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

குற்றச் சம்பவங்கள்:

"பீகாரில் எங்கள் அரசு அமைவதற்கு முன், இடம் பெயர்வு, மோசடி, கொலைகள், கடத்தல் ஆகியவை பொதுவானதாக இருந்தன. சிவான் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூரில், கேங்ஸ்டாராக இருந்து அரசியல்வாதியாக மாறிய மறைந்த முகமது ஷகாபுதீன் மகன் ஒசாமா ஷஹாப்பிற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இது போன்ற வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தால், பீகாரில் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்," என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.