சிறையிலிருக்கும் நடிகர் திலீப்புக்கு ஆதரவான போக்கில் கருத்து தெரிவித்ததற்காக நடிகர் ஸ்ரீனிவாசனின் வீட்டில் கறுப்பு ஆயிலை ஊற்றி சென்றிருக்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். இந்த விவகாரம் கேரள அரசியல் மற்றும் திரையுலகின் புருவத்தை உயர்த்தியுள்ளது. 

மலையாள நடிகை கடத்தப்பட்டு, பாலியல் அத்துமீறல் செய்யப்பட்ட வழக்கில் மெகா ஹீரோ திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். திலீப்பின் கைதை துவக்கத்தில் மலையாள திரையுலகம் ஆதரித்தாலும் கூட நாட்கள் நகர நகர சிலர் அதில் வேறுபட்ட கருத்தை தெரிவிக்க துவங்கியுள்ளனர். 
அந்த வகையில் மலையாள திரையுலகின் லெஜண்ட் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான ஸ்ரீனிவாசன் கடந்த சனிக்கிழமையன்று “திலீப் எந்த தவறும் செய்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். காலம் அவர் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தும்.” என்று சொல்லியிருந்தார். 

இந்த நிலையில்தான் கண்ணூர் அருகே குத்துபரம்பு, புக்கோடு செட்டியிலுள்ள ஸ்ரீனிவாசனின் பாரம்பரிய வீட்டின் முன்வாசல் மற்றும் சில பகுதிகளில் சனிக்கிழமை இரவில் யாரோ விஷமிகள் கறுப்பு நிற ஆயிலை ஊற்றிச் சென்றிருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு தான் கட்டிய இந்த வீட்டுக்கு தன் மகன் வினீத் (நடிகர் கம் இயக்குநர்) பெயரை வைத்துள்ளார் ஸ்ரீனிவாசன். ஸ்ரீனிவாசன் இந்த வீட்டில் வசிக்கவில்லை, அவர் கொச்சினில் வசிக்கிறார். இந்த வீட்டில் அவரது நண்பர் விநோத்தின் குடும்பம் வசிக்கிறது.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ஸ்ரீனிவாசன் “இதற்காக போலீஸில் புகார் கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என் வீட்டில் ஆயில் ஊற்றியவர்கள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் வீட்டிலும் ஊற்ற வேண்டும். திலீப்பிற்கு சப்போர்ட்டாக பேசுபவர்களின் வீட்டின் மீது ஆயில் ஊற்ற வேண்டுமென்றால் இந்தியாவில் அந்தளவுக்கு ஆயில் இல்லையே, பத்தாதே!
ஆயிலை ஊற்றியதே ஊற்றினார்கள், முழு வீட்டிற்கும் அபிஷேகம் செய்திருந்தால் எனக்கு பெயிண்ட் அடிக்கிற செலவாவது இந்தாண்டு மிச்சமாகியிருக்கும். நான் திலீப்புக்கு ஆதரவாக பேசினேன் என்று சொல்லாதீர்கள். பல வருடங்களாக அவரை அறிந்தவன் என்ற முறையில் அவர் இந்த மாதிரி இழிவான விஷயங்களை செய்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன் அவ்வளவே.” என்று காமெடியும், சீரியஸும் கலந்து இந்த விவகாரம் குறித்து பதில் சொல்லியிருக்கிறார்.