mla came in bullock cart to allow rekla race

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் நடத்த அனுமதிக்க கோரி மாநில சட்டப்பேரவைக்கு மாட்டு வண்டியில் வந்து எம்.எல்.ஏ. ஒருவர் நேற்று ஆதரவு கோரினார்.

ஜல்லிக்கட்டு அனுமதி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இந்த ஆண்டு இளைஞர்கள் தன் எழுச்சியாகத் திரண்டு நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி அளித்தது. இதைப் போன்று, கர்நாடக மாநிலத்திலும் கம்பளா என்ற எருமை மாட்டுப் பந்ததையத்துக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

மாட்டுவண்டியில் எம்.எல்.ஏ.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டு வண்டிப் பந்தயத்துக்கு அனுமதிக்க கோரி நேற்று எம்.எல்.ஏ. மகேஷ் லாண்ட்கே போர்க்கொடி தூக்கியுள்ளார். சட்டப்பேரவைக்கு மாட்டு வண்டியில் வந்து தனது மாட்டு வண்டிப் பந்தயத்துக்கு தனது ஆதரவை அவர் தெரிவித்தார்.

தடையை நீக்க வேண்டும்

அப்போது எம்.எல்.ஏ. மகேஷ் நிருபர்களிடம் பேசுகையில், “ 1960ம் ஆண்டு மிருகங்கள் வதை தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, நூற்றாண்டுகள் பாரம்பரியமான மாட்டு வண்டிப் பந்தயத்தை நடத்த வழி செய்ய வேண்டும்.

போட்டி தேவை

நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இது தொடர்பாக மசோதா கொண்டு வரப்படும் என முதல்வர் பட்நாவிஸ் உறுதியளித்துள்ளார். ஆனால், கூட்டத்தொடரின் முதல் வாரத்திலேயே இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கும் போது விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல் தமிழக அரசு தடையை நீக்கியது. அதுபோல் மஹாராஷ்டிரா அரசும் செய்ய வேண்டும்'' என்றார்.

நிறுத்தம்

மாட்டு வண்டியில் சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ. மகேஷையும், அவரின் ஆதரவாளர்களையும்பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.

எதிர்ப்பு

எம்.எல்.ஏ. மகேஷின் இந்த செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாட்டு வண்டிப்போட்டியில் மாடுகள் கொடுமைப்படுத்தப்படுகிறது என்பதால் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை நடத்தக்கூறுவது எப்படி எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எம்.பி.யின் குரல்

புனே மாவட்டம், சிரூர் தொகுதி எம்.பி.யும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சிவாஜி ராவ் அதல்ராவ்பாட்டீல் கூறுகையில், “ மஹாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டு வண்டிப்பந்தயத்துக்கான தடையை நீக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் 3 முறை குரல் கொடுத்து இருக்கிறேன். இந்த விசயத்தில்பிரதமர் மோடி தலையிட வேண்டும் என கேட்டு இருக்கிறேன்'' என்றார்.