நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏக்களின் ஆண்டு சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கர்நாடக மாநில எம்எல்ஏக்களின் ஆண்டு வருமானம் அதிகபட்சமக ஆண்டுக்கு ரூ1.10 கோடி இருப்பது தெரியவந்துள்ளது. 

நாடு முழுவதும் பதவியில் இருக்கும் 4,086 எம்எல்ஏக்கள் வேட்புமனுத் தாக்கலின் போது அளித்த பிரமாணப்பத்திரத்தை ஜனநாயகத்துக்கான சீரமைப்பு அமைப்பு எனும் தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது பதவியில் இருக்கும் 4,086 எம்எல்ஏக்களின் பிரமாணப்பத்திரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 941 எம்எல்ஏக்கள் தங்களின் வருமானத்தை பற்றிய தகவல்களை குறிப்பிடவில்லை. எனவே 3,145 எம்எல்ஏக்களின் வருமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் அவர்களின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.24.59 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

தென் மாநிலங்களைச் சேர்ந்த 711 எம்எல்ஏக்கள் ஆண்டு வருமானம் நாட்டிலேயே அதிகபட்சமாக ரூ.51.99 லட்சமாகவும், குறைந்தபட்சமாக கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் வருமானம் ரூ.8.53 லட்சமாகவும் இருக்கிறது. எம்எல்ஏக்கள் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களின் தொழில் வர்த்தகம் மற்றும் விவசாயம் எனத் தெரிவித்துள்ளனர்.

பெண் எம்எல்ஏக்களைக் காட்டிலும் ஆண் எம்எல்ஏக்களுக்கு வருமானம் 2 மடங்காக இருக்கிறது. ஆண் எம்எல்ஏக்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.25.85 லட்சமாகவும், பெண் எம்எல்ஏக்களுக்கு சராசரி வருமானம் ரூ.10.53 லட்சம்  எனத் தெரியவந்துள்ளது. 

மாநிலவாரியாக கர்நாடக மாநில எம்எல்ஏக்கள் 203 பேரின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.1.14 கோடியாக முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலத்தின் 203 எம்எல்ஏக்கள் வருமானம் ரூ.43.40 லட்சமாக இருக்கிறது. குறைந்தபட்சமாக சத்தீஸ்கர் மாநிலத்தின் 63 எம்எல்ஏக்கள் வருமானம் ரூ.5.40 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.