mishraa complaint to cbi about aravind gejrival

டெல்லியில் அமைச்சர் பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா, நேற்று முதல்வர் கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ.யிடம் புகார் அளித்ததுடன், உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மந்திரி சபையில் நீர்வளத் துறை மந்திரியாக இருந்த கபில் மிஸ்ரா கடந்த 6-ந்தேதி நீக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான கபில் மிஸ்ரா கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறினார்.

சுகாதாரத்துறை மந்திரியான சத்யேந்தர் ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடியை கெஜ்ரிவால் லஞ்சமாக பெற்றதாகவும், அதை தான் நேரில் பார்த்ததாகவும் அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கெஜ்ரிவாலுக்கு எதிராக ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்த அவர், கெஜ்ரிவால் மீது டேங்கர் ஊழல் புகாரும் அளித்து இருந்தார். ஊழலில் ஈடுபட்ட அனைவரும் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் எனக் கூறிய அவர், அடுத்து சி.பி.ஐ.யிடம் செல்ல இருப்பதாகவும் கூறினார். இதை தொடர்ந்து கபில் மிஸ்ரா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று சி.பி.ஐ. அலுவலகத்திற்குச் சென்று அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற தலைவர்கள் மீது கபில் மிஸ்ரா மூன்று புகார்களை கொடுத்துள்ளார்.

பின்னர் வெளியே வந்த கபில் மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

சி.பி.ஐ.யிடம் மூன்று புகார்களை அளித்துள்ளேன். முதலாவது, அரவிந்த் கெஜ்ரிவாலின் உறவினர் சம்பந்தப்பட்ட ரூ.50 கோடி நில பேரம் தொடர்பான புகார். இரண்டாவது, கெஜ்ரிவால்-சத்யேந்திர ஜெயின் இடையிலான ரூ.2 கோடி பணப் பரிமாற்றம் குறித்த புகார். மூன்றாவது, வெளிநாட்டுப் பயணங்களுக்காக கட்சி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் 5 பேர் மீதான புகார்.

ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயண விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தன்னை சட்டசபையில் இருந்து வெளியேற்ற முதலமைச்சர் கெஜ்ரிவால் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய கபில் மிஸ்ரா, தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என சவால் விடுத்தார்.

‘எனது கராவல் நகர் தொகுதியாக இருந்தாலும் சரி, உங்களது புதுடெல்லி தொகுதியாக இருந்தாலும் சரி இருவரும் போட்டியிடலாம். மக்கள் உங்கள் பக்கம் இருப்பதாக நீங்கள் நம்பினால், நான் ராஜினாமா செய்துவிட்டு போட்டியிட தயார்’ என்றார் மிஸ்ரா.