Asianet News TamilAsianet News Tamil

Fake Videos: ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ: எச்சரிக்கும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Minister rajeev chandrasekhar warns about fake video information under it rules smp
Author
First Published Nov 6, 2023, 1:33 PM IST | Last Updated Nov 6, 2023, 1:46 PM IST

இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்க்கையின் பெரும்பகுதியை நம்மில் பலரும் ஆன்லைனிலேயே செலவழிக்கின்றனர். ஆனால், இதில் பல்வேறு மோசடிகள் நடக்கின்றன. டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆன்லைனில் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. நமது தரவுகள் ஹேக்கர்களால் திருடப்படுகின்றன. பணப் பரிவர்த்தனைகளில் மோசடிகள் நடக்கின்றன. 

அதேபோல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் மோசடிகள் நடக்கின்றன. சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பெருகிக் கிடக்கின்றன. இதனை கட்டுப்படுத்தவும், டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சிலவற்றையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் போலி வீடியோ ஒன்று இன்று  வைரலாகி வருகிறது. இங்கிலாந்து வாழ் இந்தியப் பெண்மணியான ஜாரா படேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களாக இருக்கின்றனர். அவர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தனது வீடியோ ஒன்றை  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோவில் அவரது முகத்தை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கியுள்ளனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில், deep fake தொடர்பான கவலைகள் எழுப்பப்படுகின்றன. இந்தியாவில் deep fake-ஐ கையாள்வதற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் அவசரத் தேவை உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள, இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி வரும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இணையத்தைப் பயன்படுத்தும் அனைத்து டிஜிட்டல் பயனர்களின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதில் பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதி பூண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதல்வர் ஸ்டாலின் வீடியோவுக்கு தடை: அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்!

மேலும், ஏப்ரல், 2023 இல் அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ், சமூக வலைதளங்களுக்கான சட்டப்பூர்வ கடமைகள் குறித்தும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, எந்தவொரு பயனராலும் தவறான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதை அத்தளங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

 

 

எந்தவொரு பயனர் அல்லது அரசாங்கத்தால் புகாரளிக்கப்பட்டால், தவறான தகவல் 36 மணிநேரத்தில் அகற்றப்படுவதை சமூக வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும். சமூக வலைதளங்கள் இதற்கு இணங்கவில்லை என்றால், விதி 7, IPC விதிகளின்படி, பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு செல்லலாம். சமீபத்திய வரவான deep fake மிகவும் ஆபத்தானது. தவறான தகவல்களை பரப்பக்கூடிய அவற்றை சமூக வலைதளங்கள் கையாள வேண்டும் என்று அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios