Minimum Ballon and raise the deposit ceyyamattanka nobody - CM Chandrababu Naidu Tease

‘சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை அளவை வங்கிகள் அதிகரித்தால், மக்கள் பணத்தை வங்கியில் டெபாசிட்செய்யமாட்டார்கள், வீட்டிலேயே வைத்துக்கொள்வார்கள்’ என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கிண்டல் செய்துள்ளார்.

சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகை அளவை அதிகரித்து சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி உத்தரவிட்டது. இந்த முடிவால் ஏறக்குறைய 31 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைநகர் அமராவதியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்காக முதல்வர்கள் குழுவினர் செய்த பரிந்துரைக்கு மாறாக இப்போது வங்கிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. வங்கிகள் புதிய விதிமுறைகளை புகுத்தினால், அது வாடிக்கையாளர்களுக்கு பிரச்சினையை உருவாக்கும். குறைந்த பட்ச இருப்புத்தொகை இருக்க வேண்டும் என வங்கிகள் வாடிக்கையாளர்களை வற்புறுத்தினால், அதன்பின் மக்கள் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யவரமாட்டார்கள். வீட்டிலேயே வைத்துக்கொள்வார்கள்.

வங்கிகள் எடுத்துள்ள முடிவு சரியானது இல்லை. டிஜிட்டல்பொருளாதாரத்தை நோக்கி நகரும் நமது இலக்குக்கான பாதைக்கு வங்கிகள் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. நம்முடைய நோக்கம், அனைவரும் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்பதுதான்.

உண்மையான பணத்தின் செலவைக் காட்டிலும், டிஜிட்டல் கரன்சியின் செலவு குறைவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான்,டிஜிட்டல் பொருளாதாரம் வெற்றி பெறும். அதுதான் அடிப்படை கொள்கை.

பணம் வங்கிக்கட்டமைப்பு வந்தால், இது நிச்சயம் வருவாயைப் பெருக்கும், இதில் எந்த பொய்யும் இருக்காது.பொருளாதாரம் வளரும், அரசின் வருவாய் உயரும். பரிமாற்றங்கள் அதிகரித்தால்,டெபாசிட்களும் அதிகரிக்கும். வங்கிகளும் அதில் தான் கவனம் செலுத்த வேண்டும். இதில் ஏதாவது எதிர்மறையாக வங்கிகள் செய்தால், நான் இதே தேசிய அளவுக்கு எடுத்துச் செல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.