மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பில் மக்களுக்கு போதுமான பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என உளவியல் மருத்துவர்கள் எச்சரிக்ைக விடுத்துள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலத்தின் பல கிராமங்களில் வியாபாரிகளின் வியாபாரம் முழுவதும் ரொக்கப் பணத்தில் இருந்து வருகிறது. இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்தமாக வியாபாரம் பாதித்து, மக்கள் பித்துப்பிடித்ததுபோல் அலைகிறார்கள்.
வியாபாரி
பிரதமர் மோடியின் அறிவிப்பு வந்தவுடன், ஒரு கிராமத்தைச் சேர்ந்த உருளைக்கிழங்கு மொத்த வியாபாரி தான் வைத்திருந்த 60 லட்சம் மதிப்பிலான காய்கறிகளை பதப்படுத்தும் கிட்டங்கியில் வைத்து பாதுகாத்து வருகிறார்.

கடனுக்கு உருளைக்கிழங்கை மொத்தமாக வாங்கி வைத்துள்ள அந்த வியாபாரியை இப்போது பணம் கேட்டு விவசாயிகள் நெருக்குகிறார்கள். ஆனால், உருளைக்கிழங்கை வாங்குவதற்கு யாரும் வராததால், சில்லரை வியாபாரமும் இல்லாததால் இப்போது மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காய்கறிகளும் அழுகும் நிலைக்கு வந்துள்ளது.
மனநிலை பாதிப்பு
இது குறித்து அந்த வியாபாரிக்கு சிகிச்சை அளிக்கும் உளவியல் மருத்துவர் சஞ்சய் கார்க் கூறுகையில், “ அந்த வியாபாரி தான் வாங்கி வைத்திருக்கும் ஒட்டுமொத்த காய்கறிகளும் வீணாகப் போய்விடும் என அச்சப்படுகிறார். இதனால், ஒரு விதமான பயம் ஏற்பட்டு, தனக்கு மாரடைப்பு வந்து இறந்துவிடுவேன் என புலம்புகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உளைச்சல்
மத்திய அரசின் இந்த செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், மக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் பணம் இருந்தும் எடுக்க முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அடுத்து வரும் நாட்களில் மக்கள் ஏராளமானோர் மன உளைச்சலுக்கு ஆளாகி, மனரீதியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம்.
குறிப்பாக மேற்கு வங்காளத்தில் இருக்கும் கிராமங்களில் உள்ள நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த மன அழுத்தத்தால் மக்கள் எளிதில் கோபமடையும் மனநிலைக்கு தள்ளப்படுவார்கள்'' எனத் தெரிவித்தார்.
விதவைப்பெண்
மற்றொரு உளவியல் மருத்துவர் சாந்தாஸ்ரீ குப்தா கூறுகையில், “ என்னிடம் 50 வயதுடைய விதவைப்பெண் ஒருவர் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கணவர் இறந்தபின், கிடைத்த ரூ.30 லட்சத்தில் புதிய வீடும், மகனின் திருமணத்தையும் நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால், மத்திய அரசின் இந்த உத்தரவால், இப்போது அவர் தான் வைத்திருக்கும் பணத்துக்கு பாதிப்பு ஏற்படுமோ? எனக் கருதி, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார். அவரின் மன அழுத்தத்தை போக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், நன்றாக வியாபாரம் நடந்த நிலையில், திடீரென வியாபாரம் முடங்கிவிட்டதால், பணப்பற்றாக்குறை ஏற்பட்டு, மனரீதியாக வியாபாரிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கி, மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் நடவடிக்கையால், ஏற்கனவே சிகிச்சை பெற்றுவருபவர்களும் பணம் கிடைக்காமல் கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர்.
என்ன செய்யலாம்?
இந்த சூழலில் சிக்கி இருக்கும் மக்கள், இசை கேட்பது, நடப்பது, அமைதிப்படுத்திக்கொள்வது, எளிதான உடற்பயிற்சிகள் ஆகியவற்றை செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
