மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அணைக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

முன்னதாக காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6000 கோடி செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரியிருந்தது. ஆனா் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 

இந்நிலையில் மேகதாது அணை தொடர்பாக செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து இருந்தது. இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் வழங்கியது. குடிநீர்தேவை, மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே அணை கட்டுவதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வரைவு அறிக்கை ஒப்புதலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதினார். இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் அணைக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக மனுவில் புகார் தெரிவித்துள்ளது.