இந்திய குடியரசு தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார், புதிதாக டுவிட்டர் பக்கத்தை துவங்கியுள்ளார். முதல் செய்தியாக ரமலான் வாழ்த்துகளை துவங்கினார்.

தற்போதைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, நாட்டின் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் சார்பில் மீராகுமார் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்த பிறகு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மீரா குமார், சமூக வலைதளமான ட்விட்டரில் புதிதாக இணைந்துள்ளார். ட்விட்டரில் தனது முதல் பதிவாக ரமலான் வாழ்த்துகளை கூறி,  'மகிழ்ச்சியும் அமைதியும் அனைவரது வாழ்விலும் செழிக்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசியல் தலைவர்கள் பலர், தங்களது வாழ்த்து செய்திகள், எதிர் மறையான கருத்துகள் ஆகியவற்றை டுவிட்டரில் பதிவு செய்து வழக்கமாக கொண்டுள்ளனர். இதையொட்டி மீராகுமார், டுவிட்டர் பக்கத்தில்  இணைந்துள்ளதால், பல்வேறு கருத்துகளை அவர் வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.