Election Results 2023: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிவுகள் - வாக்கு எண்ணிக்கை தீவிரம்
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாவதை முன்னிட்டு காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும் நாகாலாந்து, மேகாலயாவில் பிப்ரவரி 27ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கையில் திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி முன்னிலையில் உள்ளது.
மேகாலயா தேர்தல் முடிவுகள்
மேகாலயா மாநிலம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவை. சோஹியாங் தொகுதியில் மட்டும் ஒரு வேட்பாளர் உயிரிழந்துவிட்டதால் அந்தத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும் மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான ஹெச். டி. ஆா். லிங்டோ பிப்ரவரி 20ஆம்த தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதம் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. எல்லா தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் மோதுகின்றன.
திரிபுரா தேர்தல் முடிவுகள்
60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றி தேவை. ஆளும் கட்சியான பாஜக 55 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி கட்சி 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராகப் போட்டியிடுகிறார். பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்டுகள் 46 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் போட்டி போடுகிறார். திரிபுரா மன்னர் பரம்பரையைச் சேர்ந்த தேப் வர்மாவின் திப்ரா மோத்தா என்ற கட்சியை 42 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் 28 தொகுதிகளில் போட்டியில் உள்ளது.
நாகாலாந்து தேர்தல் முடிவுகள்
நாகாலாந்து மாநிலத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 31 தொகுதிகளில் வென்றால் பெரும்பான்மை கிடைக்கும். இந்த மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சி 40 தொகுதிகளிலும் பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் 23 தொகுதிகளிலும், நாகா மக்கள் முன்னணி 22 தொகுதிகளிலும், ராம்விலாஸ் பாஸ்வானின் ஜன்சக்தி கட்சி 15 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அகுலுடோ தொகுதியில் மட்டும் பாஜக தேர்தலுக்கு முன்பே வெற்றி பெற்றது. இதனால், நாகாலாந்நில் 59 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தீவிரம்
இந்த மூன்று மாநிலங்களிலும் 19 ஆயிரம் பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்காக மாநில காவல்துறையினருடன் கம்பெனி மத்திய ஆயுதப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திரிபுராவிலும் நாகாலாந்திலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளபோதும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கும் அளவுக்கு முன்னிலை பெறவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜக, காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி அதிக இடங்களில் முன்னிலை பெறுகிறது.
Assembly Election Results 2023 Live Updates: நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா தேர்தல் முடிவுகள்!