மேகாலயா முதல்வர் அலுவலக தாக்குதல் திட்டமிடப்பட்ட சதி: டிஜிபி தகவல்!
மேகாலயா முதல்வர் அலுவலகத் தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சதி என அம்மாநில டிஜிபி பிஷ்னாய் தெரிவித்துள்ளார்

மேகாலயா மாநிலத்தில் உள்ள கரோ மலைப்பகுதியில் உள்ள சில அமைப்புகள் துரா நகரத்தை அம்மாநிலத்தின் குளிர்கால தலைநகராக அறிவிக்க வேண்டும் என போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்வைத்து கடந்த சில நாட்களாக A'chik Conscious Holistically Integrated Krima (ACHIK) என்ற அமைப்பினர் அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக, துரா நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இரு தரப்பை சேர்ந்த போராட்டக்காரர்களுடன் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் தீடிரென முதல்வர் அலுவலகத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது. இதில், முதல்வரின் பாதுகாலவர்கள் 5 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், மேகாலயா முதல்வர் அலுவலகத் தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என அம்மாநில டிஜிபி பிஷ்னாய் தெரிவித்துள்ளார். முதல்வரை உடல் ரீதியாக தாக்க வேண்டும் என ஏற்கனவே சதித்திட்டம் தீட்டி இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி எல்.ஆர்.பிஷ்னாய், “முதற்கட்ட விசாரணையில் முதல்வரை உடல் ரீதியாக தாக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என தெரியவந்துள்ளது. வன்முறையை ஏற்படுத்துவதற்காக ஜூலை 23ஆம் தேதி இளைஞர்கள் சிலருக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அவர்களுக்கு ஏராளமான மதுபாட்டில்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.” என்றார்.
தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த பலர் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேன்கள் தீப்பெட்டி மற்றும் லைட்டர்களுடன் வந்ததாவும், சம்பவ இடத்தில் ஏராளமான கற்கள் கிடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை இயக்குனருக்கு பணி நீட்டிப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு!
“சம்பவ இடத்தில் முதல்வரை அச்சுறுத்தும் வகையில் பேச்சுகள் தூண்டப்பட்டன. முதலமைச்சருக்கு உடல்ரீதியாக சேதம் விளைவிப்பதற்காக கூட்டத்தை தூண்டிவிட்டு, கொலை போன்ற தீவிர நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என அங்கிருந்தவர்கள் கூறினர்.” எனவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று முதல்வர் கான்ராட் சங்மா கூறியுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை என்னால் இப்போது கூற முடியாது. விசாரணை முடிந்ததும் முழு விவரம் தெரியவரும் என உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக 26 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.