மேகாலயா அசாம் இடையே மீண்டும் மோதல்; துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு!!
மேகாலயா அருகே மரம் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட கும்பலுக்கும், அசாம் வனத்துறை காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, அசாம் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அசாம் வனக் காவலர் ஒருவர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இரு மாநிலங்களின் எல்லையில் நேற்று அதிகாலை ஏற்பட்டது. அசாமின் அங்லாங் மாவட்டத்தின் மேற்கு கர்பி மற்றும் மேகாலயாவின் முக்ரோ கிராமத்திற்கு இடையே மேற்கு ஜைந்தியா மலையில் இந்த மோதல் ஏற்பட்டது. இருமாநிலங்களுக்கும் இடையே எல்லை தகராறு இருந்து வருகிறது. இதுகுறித்து இந்த மாதத்தில் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில் மோதல் வெடித்துள்ளது.
இதுகுறித்து மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா கூறுகையில், இந்த மோதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நாளை தெரிவிக்க இருக்கிறோம். அப்போது, தேசிய புலனாய்வு அமைப்பு, சிபிஐ இந்த மோதலை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது ஏர்டெல்… அதிர்ச்சியில் பயனர்கள்!!
இருமாநிலங்களுக்கு இடையில் நடந்த இந்த மோதலை கூர்ந்து கவனித்து வருவதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருமாநிலங்களுக்கும் இடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்படுவது போல் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர் அமித்ஷா முன்பு இருமாநிலங்களின் முதல்வர்களும் எல்லையில் சமரசமாக செல்வது என்று கையெழுத்திட்டனர். மாநில கமிட்டிகளை நியமிப்பது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவு செய்து இருந்தனர். இருமாநிலங்களுக்கும் இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது.
அசாம் மாநிலம் 1972ஆம் ஆண்டில் உதயமானது. அப்போது இருந்தே சுமார் 884 கிலோ மீட்டர் தொலைவிற்கு 12 இடங்களில் மோதல் இருந்து வருகிறது. மோதலில் தங்களை பாதுகாத்துக் கொள்ளவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அசாம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் கமிட்டியை அசாம் அரசு நியமித்துள்ளது. இந்தக் கமிட்டி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் மீண்டும் இருமாநிலங்களுக்கும் இடையே மோதல் வெடிக்காமல் இருப்பதற்கு உஷார்படுத்தப்படுள்ளனர்.
மோதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நவம்பர் 30ஆம் தேதி வரை, செர்ரி ப்ளாசம் விழா உள்ளிட்ட அனைத்து அதிகாரப்பூர்வ விழாக்களையும் ரத்து செய்ய மேகாலயா அரசு முடிவு செய்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.