Meet Tushar 8 year old Divyang Boy Who Made His Village Open Defecation Free

மத்திய அரசின் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தையும், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தக்கூடாது என்பதை மக்களிடத்தில் பரப்புவதற்காக 8 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் செய்த செயல்களை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

மான்கிபாத்

மக்களுடன் உரையாடும் பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சியின் 38-வது மாதமாக நேற்று வானொலியில் ஒலிபரப்பானது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது-

ஸ்வாச் பாரத்

மத்தியப் பிரதேச மாநிலம், பாலாகாத் மாவட்டத்தில் உள்ள குமாரி கிராமத்தைச் சேர்ந்தவன் துஷார்(வயது8). இந்த சிறுவன் மத்திய அரசின் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்துக்காவும், ‘திறந்தவெளிக் கழிப்பிடமில்லாத கிராமமாக மாற்றவும் கடுமையாக உழைத்து வருகிறான்.

மாற்றுத்திறனாளி

இந்த சிறுவனால் பேசவும் முடியாது, மற்றவர்கள் பேசுவதையும் கேட்கவும் இயலாது. பிறவியிலேயே இந்த குறைபாடு அவனுக்கு இருக்கிறது. ஆனாலும், தனது கிராமத்தை தூய்மையாக வைத்து இருக்க வேண்டும், திறந்தவெளிக் கழிப்பிடம் இருக்ககூடாது என்பதை செயல்படுத்த தீவிரம் காட்டினான்.

விழிப்புணர்வு

இதற்காக நாள்தோறும் தனது கிராமத்தில் உள்ள மக்களிடம் திறந்தவெளி கழிப்பிடத்தின் கேடுகளை தன்னால் முடிந்த அளவுக்கு எழுத்து மூலம் தெரிவித்து, விழிப்புணர்வு ஊட்டுகிறான். அதன்பின் பள்ளிக்கு செல்கிறான்.

பிரசாரம்

காலையில் 5 மணிக்கு எழுந்திருக்கும் துஷார், வீடு,வீடாகச் சென்று, யாரும் திறந்தவெளியில் கழிப்பிடமாக பயன்படுத்தாதீர்கள் என்று பிரசாரம் செய்து வருகிறான். நாள் ஒன்றுக்கு 40 வீடுகளுக்குச் சென்று இந்த பிரசாரத்தை முன்னெடுத்து அதன்பின் பள்ளிக்குச் சென்றான்.

விசில்

அவ்வாறு யாரேனும் திறந்தவெளியை பயன்படுத்தினால், விசில் அடித்து அவர்களை தடுத்தான். கழிப்பிடத்தை பயன்படுத்த அறிவுறுத்தினான். இதனால், இன்று குமாரி கிராமத்தில் அனைத்து மக்களும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தாமல், கழிப்பறையை பயன்படுத்துகிறார்கள். அவனின் செயல் பாராட்டுக்குரியது. 

இவ்வாறு சிறுவனை பிரதமர் மோடி பாராட்டினார்.