mayavathi press meet

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறைகேட்டை பேசியதால் தான் பாஜகவால் குறி வைக்கப்படுவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தலில் பின்னடைவு

உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. முன்பு ஆட்சியில் இருந்த அந்தக்கட்சி மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 19-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக லக்னோவில் நேற்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கட்சியின் தலைவர் மாயாவதி கலந்து கொண்டு பேசியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்து தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று வருகிறது. இதனைப் பற்றி பேசுவதால் அக்கட்சியினர் என்னை குறி வைக்கின்றனர். இருப்பினும் நான் இந்த விவகாரத்தை தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பேன்.

போராட்டம் தள்ளிவைப்பு

பாஜகவின் இந்த மோசடியை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து போராடும். 2014 மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அந்த மோசடியை சமீபத்தில் நடந்த தேர்தல்களில்தான் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்ற 250 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்யப்பட்டுள்ளது.

மற்ற 153 தொகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்று பாஜகவினர் எண்ணினர். அவற்றில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை.

மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறைகேட்டை கண்டித்து ஒவ்வொரு மாதமும் 11-ந்தேதி பகுஜன் சமாஜ் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருப்பதால் அந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு சவால்

கடந்த சில ஆண்டுகளாக எனது நெருங்கிய உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் மத்திய அமைப்புகள் சோதனை நடத்துகின்றன. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எங்களுக்கு எதிராக மத்திய நிறவனங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பாஜக தலைவர்கள் தாங்கள் மட்டும்தான் நல்லவர்கள், நேர்மையானவர்கள் என்றும் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் அயோக்கியர்கள், ஊழல்வாதிகள் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

உண்மையில் பாஜக தலைவர்கள் நேர்மையானவர்கள் என்றால், செல்லாத ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு 10 மாதங்களுக்கு முன்பிருந்து, அவர்களுடைய வங்கி வரவு, செலவு கணக்குகளை வெளிப்படையாக அறிவிக்கட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சகோதரர் துணைத் தலைவர்

மாயாவதி நேற்று தனது கட்சியில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். தனது வேலைப்பளுவை குறைப்பதற்காக தனது சகோதரர் அனந்த குமாரை கட்சியின் துணைத் தலைவராக நியமித்தார்.

இதுகுறித்து மாயாவதி பேசுகையில், நான் 5 நாட்களுக்கு ஒருமுறை டெல்லி செல்ல வேண்டியுள்ளது.

வேலைப்பளு அதிகம் இருப்பதால் கட்சியின் துணைத் தலைவராக எனது சகோதரர் அனந்த குமாரை நியமித்துள்ளேன்.

அவர் டெல்லி விவகாரங்களை கவனிப்பார். தேர்தலில் அனந்த குமார் போட்டியிடவோ, எம்.பி., எம்.எல்.ஏ.வாகவே அவர் ஆக மாட்டார். அவருக்கு தனது குடும்ப உறுப்பினரை கட்சி பொறுப்புக்கு கொண்டு வரும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

முத்தலாக் விவகாரம்

முத்தலாக் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த மாயாவதி அது முஸ்லிம் சமூகத்தின் உள்விவகாரம் என்றும் அதில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் பேசும்போது, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்கள் சிலர், முத்தலாக் விவகாரத்தில் பெண்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றனர்.

எனவே அந்த அமைப்பால் முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்க முடியாது என்று கருதுகிறேன். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்து, முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிடவே கூடாது

என்றார்.