போபால் அரசு அலுவலகத்தில் மாபெரும் தீ விபத்து: ராணுவ உதவியுடன் 15 மணிநேரம் நீடித்த தீயணைப்புப் பணிகள்
போபாலில் உள்ள பல அரசுத் துறைகளின் அலுவலகங்கள் இருக்கும் சத்புரா பவன் கட்டடத்தில் நேற்று மாபெரும் தீ விபத்து ஏற்பட்டு, பெரும் போராட்டத்துக்குப் பின் கட்டுக்குள் வந்தது.
போபாலில் உள்ள சத்புரா பவனில், பல அரசுத் துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் நேர்ந்த மாபெரும் தீ விபத்து நீண்ட போராட்டத்திற்குப் பின்பு அணைக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை, இந்திய ராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் தீயணைப்புப் பணியில் சுமார் 15 மணிநேரம் போராடியுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக சரியான நேரத்தில் கட்டிடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பழங்குடியினர் நலத்துறையின் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ள அரசு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் மாலை திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவித்தன.
மோடி அரசு குறித்து ஜாக் டோர்சியின் விமர்சனம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்டமா?
மூன்றாவது மாடியில் இருந்து, மூன்று மேல் தளங்களுக்கு தீ வேகமாக பரவியது. தீயில் பல ஏசிக்களும் கேஸ் சிலிண்டர்களுடன் வெடித்துச் சிதறிய சத்தமும் கேட்டதாக அப்பகுதியில் உள்ளவர்கள் சொல்கின்றனர். சுகாதாரத் துறை அலுவலகம் உட்பட, அங்கு அமைந்துள்ள அனைத்து அலுவலகங்களும் தீயினால் நாசம் ஆகியுள்ளன. அங்கு இருந்த கோப்புகள் தீயில் அழிந்துள்ளன.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இந்தத் தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் தெரிவித்து தீயை அணைக்க உதவி கோரினார். போபால் போலீஸ் கமிஷனர் ஹரிநாராயண் சரி மிஸ்ரா, மின்கசிவுதான் தீ விபத்துக்கான காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளதாகக் கூறுகிறார். ஆனால் மேலும் இதைப்பற்றி விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
"தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் வெவ்வேறு இடங்களில் புகைமூட்டம் உள்ளது. அது பின்னர் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க குழுக்கள் வேலை செய்துவருகின்றன. தீ விபத்திற்கான காரணம் ஷார்ட் சர்க்யூட் தான் என்று தெரியவந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது" என ஹரிநாராயண் சரி மிஸ்ரா கூறினார்.
மனைவி பெயரில் வாங்கிய சொத்து பினாமி சொத்து அல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு