மணிப்பூர் வன்முறை: முந்தைய உத்தரவை திரும்பப் பெற்ற உயர் நீதிமன்றம்!
மணிப்பூர் வன்முறைக்கு காரணமாக இருந்த தனது முந்தைய உத்தரவை திரும்பப்பெறுவதாக அம்மாநில உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53 சதவீதமான மைதேயி சமூக மக்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். அதே சமயம் நாகாக்கள் மற்றும் குக்கிகள் உட்பட 40 சதவீத பழங்குடியினர் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர். அம்மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது கடந்த 2023ஆம் ஆண்டு மைதேயி சமூக மக்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க முன்னுரிமை அடிப்படையில் நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மணிப்பூர் மாநில அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின சமூலம் நடத்திய பேரணியின்போது, வன்முறை வெடித்தது. கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி வெடித்த இனக்கலவரம் அம்மாநிலத்தில் இன்னும் ஓயவில்லை.
சீதா, அக்பர் சிங்கங்களுக்கு வேறு பெயர்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்த நிலையில், மணிப்பூர் வன்முறைக்கு காரணமாக இருந்த தனது முந்தைய உத்தரவை திரும்பப்பெறுவதாக அம்மாநில உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பழங்குடியினர் பட்டியலில் மைதேயி சமூக மக்களை சேர்க்க வேண்டும் என்ற தங்களது பழைய உத்தரவை திரும்பப் பெறுவதாக மணிப்பூர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பழங்குடியினரை பட்டியலிடப்பட்ட பிரிவில் சேர்ப்பதற்கும் விலக்குவதற்கும் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வகுத்த செயல்முறையை மணிப்பூர் உயர் நீதிமன்றம் தனது இன்றைய உத்தரவில் மேற்கோள் காட்டியுள்ளது. அதன்படி, பழங்குடியினரை பட்டியலிடப்பட்ட பிரிவில் சேர்ப்பதற்கும் விலக்குவதற்குமான பொறுப்பு மத்திய அரசுக்கானது. அதில், நீதிமன்றங்களுக்கு எந்த பங்கும் இல்லை. பழங்குடியின பட்டியலை நீதிமன்றங்கள் மாற்றவோ, திருத்தவோ முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு மீது விசாரணை: அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்!
முன்னதாக, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 1,118 பேர் காயமடைந்துள்ளனர். 33 பேர் மாயமாகியுள்ளதாகவும், 96 பேரின் சடலங்கள் இதுவரை உரிமை கோரப்படாமல் பிணவறைகளில் கிடப்பதாகவும், குறைந்தது 5,172 தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதில் 4,786 வீடுகள் மற்றும் 386 மதவழிபாட்டு தளங்கள் (254 தேவாலயங்கள் மற்றும் 132 கோவில்கள்) தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று மாதங்களுக்கு முன்பு அம்மாநில அரசு வெளியிட்டிருந்த தரவுகள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.