அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு மீது விசாரணை: அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்!
அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு மீது முதல்வர் ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது
கனிம வள துறையின் 700 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் இதில் பல்வேறு முக்கிய அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கு இருப்பதாக கூறி அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்க துறையில் நடந்த ரூபாய் 700 கோடி ஊழல் குறித்த ஆதாரங்களையும் புகாரையும் அறப்போர் இயக்கம் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்புத் துறையில் சமர்ப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கனிமவள கல்குவாரி ஊழல் குறித்த ஆதாரங்களை துல்லியமாக சேகரித்து அவற்றை விசாரணை அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளோம்.
புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு 2022 இல் ஆணையராக இருந்த ஜெயகாந்தன் IAS, 53 குவாரி உரிமையாளர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் பிரதிநிதிகளாகவும் கட்சியில் பொறுப்பும் வகித்துக் கொண்டிருக்கும் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் மீதும், SAV குழு உரிமையாளர் மற்றும் திமுக பிரமுகர் கிரகாம்பெல் மீதும் மற்றும் பலர் மீது ஊழல் வழக்கிற்கான FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறையை கோரியுள்ளோம்.
2022 மே மாதத்தில் திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் என்னும் இடத்தில் சங்கரநாராயணன் என்பவரின் குவாரியில் சட்டவிரோதமாக விதிகளை மீறி மிகப் பெரிய அளவில் கல் குவாரி வெட்டி எடுக்கப்பட்டதால் அவை எந்த பாதுகாப்பும் இன்றி சரிந்து விழுந்து நான்கு பேர் இறந்தனர்.
இதன் பிறகு அப்போதைய புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனராக இருந்த நிர்மல்ராஜ் IAS உடனடியாக பல மாவட்ட அதிகாரிகளைக் கொண்டு ஒரு ஆய்வுக் குழு அமைத்து அனைத்து குவாரிகளையும் விதிமீறல்களுக்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டார். ஆய்வுக்குழு அனைத்து குவாரிகளையும் சோதனை செய்து 54 குவாரிகளில் 53 குவாரிகள் விதிகளை மீறி நடப்பதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கைகள் மீது சேரன்மாதேவி துணை ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி கோட்டாட்சியர் இருவரும் அவர்கள் பகுதியில் உள்ள குவாரிகளுக்கு ஆய்வுக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விதிமீறலுக்கு ஏற்ப அபராதம் விதித்தனர்.
சீதா, அக்பர் சிங்கங்களுக்கு வேறு பெயர்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அறப்போர் இயக்கம் விதிமீறல்கள் நடந்த 53 குவாரிகளில் துணை ஆட்சியர் ஆணையிட்ட 24 குவாரிகளின் ஆணைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெற்றது. மிக முக்கியமாக 24 குவாரிகளில் மட்டுமே கிட்டத்தட்ட 50 லட்சம் கன மீட்டருக்கும் மேலான சாதாரண கற்கள் மற்றும் கிட்டத்தட்ட 5.5 லட்சம் கன மீட்டருக்கும் மேலான கிராவல் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 1 கோடி கனமீட்டருக்கு மேலாக சட்டவிரோதத்திற்கு உட்பட்டு சுரண்டப்பட்டு உள்ளது. திருநெல்வேலியை கேரளாவிற்கு மொத்தமாக கொடுத்து விடலாம் என கேள்வி எழுகிறது.
குறிப்பாக கடந்த காலங்களில் லஞ்சம் தொடர்பாக புகார்கள் இருந்தால் உடனடியாக தெரிவியுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்பொழுது கூறியிருந்தார். எனவே தொடர்ந்து முதலமைச்சரை இத்தொடர்பாக சந்தித்து பேச முயற்சித்து வருகிறோம்.
லஞ்ச ஒழிப்புத்துறை கனிமவள துறை சார்ந்த அதிகாரிகளையும் குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் சபாநாயகர் அப்பாவோ நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்ளிட்டவர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வலியுறுத்தியுள்ளார்.