பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்னிலையில் திரிபுரா முதல்வராக இரண்டாவது முறை டாக்டர் மாணிக் சாகா பதவியேற்றுக் கொண்டார். 

அகர்தலாவில் இருக்கும் விவேகானந்தா ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாணிக் சாகாவுக்கு ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் நான்கு பேர் புதிய முகங்கள். ஒருவர் பெண் அமைச்சர். விழாவில் பிரதமர் மோடியுடன் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து கொண்டார்.

கூட்டணியில் ஐபிஎப்டி கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று அமைச்சர் பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளது. திப்ரா மோதா கட்சியினர் ஆளும் கூட்டணியில் சேரலாம் என்ற நம்பிக்கையில் அவர்களுக்காக காலியாக வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டு இருந்தது. ஆனால், தேர்தலுக்குப் பின்னர் பெரிய அளவில் வன்முறைகள் நடந்ததாகக் கூறி பதவியேற்பு விழாவை இந்த இரண்டு கட்சிகளும் புறக்கணித்தன. தேர்தலுக்கு முன்பு வரை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக இருப்பதாகவும், மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த பாஜகவுக்கு எதிராக எதிர்ப்பு அலை இருந்ததாகவும் கூறப்பட்டது. இவற்றை மீறி, மீண்டும் பாஜக வெற்றி பெற்று இருப்பதால், இரண்டாவது முறையாக மாணிக் சாகாவை பாஜக தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

நாகாலாந்து முதல்வராக நெய்பியு ரியோ, மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா பதவியேற்பு; பிரதமர் பங்கேற்பு!!

மொத்தம் 60 இடங்களைக் கொண்ட திரிபுராவில் பாஜக 32 இடங்களிலும், கூட்டணியில் இருந்த ஐபிஎப்டி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. திரிபுரா மாநிலம் தொடர்ந்து கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தது. தற்போது இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை கடுமையான எதிர்ப்புக்கு இடையே தோற்கடித்து மாணிக் சாகா முதல்வராகி இருக்கிறார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் முதல்வராக இருந்த பிப்லாப் தேப் அகற்றப்பட்டு, மாணிக் சாகா முதல்வராக பொறுப்பேற்று இருந்தார்.

மாநில அரசுக்கு ரூ. 1.5 கோடி சொத்தை தானமாக எழுதி வைத்த 85 முதியவர்; காரணம் இதுதான்!!