ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் முஸ்தபா. இவரது மனைவி ரக்சனா பேகம். ரக்சனாவிற்கு பல்வரிசை சரி இல்லை என்று கூறி அவரது கணவர் பலமாதங்களாக சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனிடையே திடீரென ஒருநாள் முஸ்தபா தனக்கு மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டதாகவும், அதுகுறித்து தொலைபேசியில் அழைத்து கேட்டபோது இருவருக்கும் இடையில் எந்தவித உறவும் இனி இல்லை என்றும் தெரிவித்ததாக ரக்சனா பேகம் புகார் கூறியிருக்கிறார். 

இதுகுறித்து கூறிய ரக்சனா பேகம், திருமணத்தின் போது முஸ்தபா வீட்டார் கேட்டதையெல்லாம் தனது பெற்றோர் செய்ததாகவும் ஆனாலும் திருமணத்தின் பின்னரும் நகை, பணம் கேட்டு தன்னை கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்தாக கூறியுள்ளார். மேலும் தனது சகோதரரின் இருசக்கர வாகனத்தையும் முஸ்தபா எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார். பல்வரிசை சரியில்லாததால் தன்னை முஸ்தபா பிடிக்கவில்லை என்று தெரிவித்ததாக கூறிய ரக்சனா பேகம், கணவர் குடும்பத்தினர் தன்னை 10 - 15 நாட்கள் வீட்டிற்குள் அடைத்து வைத்த சித்தரவதை செய்ததாக கூறியுள்ளார்.

முத்தலாக் தடை சட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில் தனக்கு தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரக்சனா பேகம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்த தலாக் விவாகரத்து முறையை ரத்து செய்து அண்மையில் மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தின்படி முத்தலாக் கூறி இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து செய்தால் மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டம் அமல்படுத்தப்பட பிறகு பல இடங்களில் இஸ்லாமிய பெண்கள் புகார் அளித்த வருவது குறிப்பிடத்தக்கது.