கையில் பாம்பை வைத்து மிரட்டி ரயிலில் பிச்சை கேட்ட நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ பரவி வரும் நிலையில், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா என உலகின் வலிமையான நாடுகளுக்கு போட்டி போட்டு வரும் இந்தியாவில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீங்கள் ரயில்கள், பேருந்துகளில் சென்றால் பிச்சைக்காரர்கள் கண்டிப்பாக உங்களிடம் கேட்டு இருப்பார்கள். இதேபோல் கோயில்கள், பொது இடங்களில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.

பாம்பை வைத்து மிரட்டி பிச்சை கேட்ட நபர்

இந்நிலையில், ரயிலில் ஒரு நபர் கையில் பாம்பை வைத்து மிரட்டி பிச்சை கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக பரவும் வீடியோவில் ஒருவர் பாம்பை கையில் வைத்துக்கொண்டு ரயில் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதும், பாம்பை கண்டு பயந்த பயணிகள் உடனடியாக அந்த நபருக்கு பிச்சை போடுவதும் என காட்சிகள் பதிவாகி உள்ளன.

பயணிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு நபர், ''மத்தியப் பிரதேச மாநிலம் முங்காவலியில் இந்த நபர் ரயிலில் ஏறியுள்ளார். கடினமாக உழைக்கும் மக்களிடம் பணம் பறிக்க இது ஒரு புதிய வழி'' என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், 'ரயிலில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. இது பொழுதுபோக்கு அல்ல, இது பாதிக்கப்படக்கூடிய மக்களைச் சுரண்டும் ஒரு மிரட்டல் செயல்' என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடுமையான நடவடிக்கை

இதுபோல் செயல்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த வீடியோவுக்கு உடனடியாக பதில் அளித்த ரயில்வே சேவா, 'இந்த விவாகரம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்லது' என்றது.

மேலும் 'உங்கள் பயண விவரங்கள் (PNR/UTS எண்) மற்றும் மொபைல் எண்ணை DM வழியாக வழங்குங்கள். விரைவான தீர்வுக்காக நீங்கள் நேரடியாக railmadad.indianrailways.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 139 என்ற எண்ணிலோ உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்' என்றும் கூறியுள்ளது.