திருப்பதி மாவட்டத்தில், குடிபோதையில் இருந்த வெங்கடேஷ் என்ற நபர், தன்னை கடித்த கட்டுவிரியன் பாம்பை திரும்ப கடித்துக் கொன்றுள்ளார். விஷம் உடல் முழுவதும் பரவியதால், அவர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பதி மாவட்டத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குடிபோதையில் இருந்த ஒரு நபர், தன்னை கடித்த விஷப் பாம்பை திரும்ப கடித்துக் கொன்றதால், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செத்த பாம்புடன் தூக்கம்
வெங்கடேஷ் என்ற அந்த நபர், குடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு கருப்பு கட்டுவிரியன் பாம்பு (black krait) அவரைக் கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், உடனடியாக அந்தப் பாம்பைப் பிடித்து அதன் தலையைக் கடித்து துப்பியுள்ளார்.
பாம்பை கொன்ற பிறகு, அந்த செத்த பாம்பைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கிவிட்ட நிலையில், செத்த பாம்பை அருகிலேயே வைத்துக்கொண்டு முரட்டுத் தூக்கம் போட்டிருக்கிறார் வெங்கடேஷ்.
விஷம் தலைக்கேறியது
பாம்பு அவரைக் கடித்திருந்ததால் இரவில் விஷம் உடல் முழுவதும் பரவியுள்ளது. விடிந்ததும் பாம்புடன் படுத்து உறங்கும் வெங்கடேஷை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வெங்கடேஷை ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெங்கடேஷின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவர் மேல் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை காலை திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இந்த வினோத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது
