திருச்சூரில் போதையில் காவல் நிலையம் வந்த நபர், தனது பையில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருப்பதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். காவல்துறையினர் கொலை வழக்காகக் கருதி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கேரளா மாநிலம் திருச்சூரில், போதையில் காவல் நிலையம் வந்த ஒருவர், தனது பையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருப்பதாகக் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சூர் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
போதையில் வாக்குமூலம்:
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புடுக்காட் காவல் நிலையத்திற்கு வந்த 26 வயது மதிக்கத்தக்க நபர், தான் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தான் ஒரு பெண்ணுடன் கொண்டிருந்த உறவில் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு இடங்களிலும், வெவ்வேறு நேரங்களிலும் புதைக்கப்பட்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அவர் கொண்டு வந்திருந்த பையில் அந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
பையில் குழந்தைகளின் எலும்புகள்:
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த நபர் காவல் நிலையம் வந்து, பையில் இரண்டு குழந்தைகளின் எச்சங்கள் இருப்பதாகக் கூறினார். ஒரு குழந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரும், மற்றொரு குழந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் இறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். அவரது கூற்றுக்களை நாங்கள் சரிபார்த்து வருகிறோம். இந்த வழக்கை ஆரம்பகட்டத்தில் ஒரு கொலை வழக்காகவே கருதி விசாரிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் என்ன?
பிடிபட்ட 26 வயது நபரும், அவருடன் தொடர்புடைய 21 வயது பெண்ணும் திருமணம் ஆகாதவர்கள் என காவல் துறை தெரிவித்துள்ளது. இருவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சலக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை, அந்த எலும்புக் கூடுகளை அடையாளம் காணவும், குழந்தைகளின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
புதைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு:
காவல் துறையினர், அந்த நபர் குறிப்பிட்ட இரண்டு புதைகுழிகளை பார்வையிட உள்ளனர். அதில் ஒன்று பொது சுடுகாட்டிலும், மற்றொன்று தனிப்பட்ட நிலத்திலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் இந்த விசாரணையில் உதவுவார்கள் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நாங்கள் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். இது ஒரு கொலை வழக்குதானா என்பதை தற்போது உறுதிப்படுத்த முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது," என்று அதிகாரி மேலும் கூறினார். இந்த சம்பவம் திருச்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
