நாட்டுக்காக சேவை செய்து ரத்தம் சிந்தி, உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை வைத்து யாரும் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்க கூடாது என மேற்கு வங்க முதல்வரும் திரினாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியானது. ஆனால், ராணுவ தரப்பில் உயிரிழப்புத் தொடர்பாக உறுதியாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 250 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். இந்த முரண்பாடுகளை வைத்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றன. மேலும் புல்வாமா தாக்குதல் மற்றும் பதிலடி தாக்குதலை பாஜக பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேசிவருவதையும் எதிர்க்கட்சிகள் குறைகூறிவருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொல்கத்தாவில் பேசும்போது, “இந்திய வீரர்களின் ரத்தத்தால் பாஜக தேர்தலில் வெற்றி பெற முடியாது. இந்திய வீரர்கள் தங்கள் நாட்டுக்காக ரத்தம் சிந்தியுள்ளார்கள். அவர்கள் இந்தியாவுக்காகப் பணியாற்றி வருகிறார்கள். ராணுவத்தினரின் தியாகங்களை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது. சிஆர்பிஎப் வீரர்கள் இறப்பை அரசியலுக்காகப் பயன்படுத்துவதைக் கண்டிக்கிறேன்.
பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரானவர்கள் நாங்கள்.  பாஜகவை தனியார் நிறுவனமாக மோடி மாற்றி வருகிறார். மோடிக்கு எதிராக யாராவது கருத்து சொன்னாலே, அவரை பாகிஸ்தான் ஆதரவாளராகச் சித்தரிக்கிறார்கள். என்னுடைய  தந்தை ஒரு தேசபக்தர். எனவே எனக்கு யாரிடமிருந்தும் தேசபக்தியைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” எனக் காட்டமாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.