பிரதமர் மோடியின் செயல்பாடும், ஆட்சியும் 14-ம் நூற்றாண்டு டெல்லி மன்னர் சுல்தான் முகமது பின் துக்ளக் போன்று இருக்கிறது என்று மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொல்கத்தாவின் பிர்பும் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி ேநற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

 நான் மத்தியில் பல ஆட்சிகளை பார்த்து இருக்கிறேன். ஆனால், துக்ளக் அரசு போன்று இயங்கும் மோடி அரசைப் போல் ஒருபோதும் பார்த்தது இல்லை. பிரதமர் மோடி துக்ளக் அரசர் போல் நிர்வாகம் செய்கிறார். வித்தியாசமான நேரங்களில், வித்தியாசமாகச் செய்கிறார்.

துக்ளக் அரசில் மன்னர் துக்ளக்கின் முடிவுகள் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கியது. அதுபோல மோடியின் ரூபாய் நோட்டு தடை முடிவால் நாட்டின் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. கிரெடிட், டெபிட் கார்டுகள் போன்ற பிளாஸ்டிக் கார்டுகளின் விற்பனை பிரதிநிதியாக மோடி செயல்படுகிறார்.

மக்கள் பிளாஸ்டிக் கார்டை சாப்பிட முடியுமா?. மக்களிடம் பணம் இல்லை. மக்களின் பணம் எல்லாம் கருப்புபணமாக அறிவிக்கப்பட்டு விட்டது. பாரதிய ஜனதா கட்சியின் கருப்புபணம் எல்லாம் வெள்ளையாக்கப்பட்டுவிட்டதா?

மத்தியஅரசை விமர்சித்து யாராவது பேசினால், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு, சி.பி.ஐ. ஏவப்பட்டு வழக்கு போடப்படும்.

குஜராத் கலவரத்துக்குபின், அமெரிக்க அரசு மோடியை கருப்புநபர்கள் பட்டியலில் வைத்தது. அவர் பிரதமராக பதவிக்கு வந்தபின்னும் அந்தபட்டியலில் இருந்து அவரை நீக்கவில்லை. அதில் இன்னும் சதி இருக்கிறது. ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் இதுவரை 120 பேர் பலியாகி இருக்கிறார்கள். அதற்கு மோடி பொறுப்பு ஏற்க வேண்டும். ஒட்டுமொத்தத்தில் மோடி அகம்பாவம் பிடித்து அலைகிறார். ரூபாய் நோட்டு தடையால் 30 சதவீத மக்கள் வேலை இழந்துவிட்டனர். 100 நாள் வேலைதிட்டத்தில் இன்னும் மக்கள் ஊதியம் பெறமுடியாமல் தவிக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் ரூபாய் நோட்டு தடை என்பது அழிவுக்கானது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.