அரவிந்த் கெஜ்ரிவால் கைது: மம்தா பானர்ஜி கண்டனம்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்
டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. டெல்லி ஆம் ஆத்மி அரசின் இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த புதிய கலால் கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அவருக்கு இதுவரை 9 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அந்த சம்மன்கள் முறைகேடானது என கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மன்களை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.
கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு வாரண்டுடன் சோதனையிட சென்றனர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இரவு 9.30 மணியளவில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார். சிறையில் இருந்து அரசை வழிநடத்துவார் என ஆம் ஆத்மி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
கவிதா மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. விசாரணை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்..
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சுனிதா கெஜ்ரிவாலை தொலைபேசியில் அழைத்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான எனது ஆதரவையும், அவருடன் எப்போதும் துணை நிற்பேன் எனவும் தெரிவித்தேன். தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி முதல்வர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அதேசமயம், சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பாஜகவுடன் இணைந்த பிறகு தூய்மையாகி விடுவதும், அவர்கள் தண்டனையின்றி தங்கள் முறைகேடுகளைத் தொடர அனுமதிக்கப்படுவதும் மூர்க்கத்தனமானது. இது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலத்தில் வேண்டுமென்றே குறிவைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவதற்கு தேர்தல் ஆணையத்தில் நமது இந்தியக் கூட்டணி தலைவர்கள் வலுவான ஆட்சேபனையை தெரிவிக்கவுள்ளனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் டெரிக் ஓ பிரையன், நதிமுல் ஹக் ஆகியோர் அக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.” என பதிவிட்டுள்ளார்.