எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் மோடி அரசு.. மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் தமிழக மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது.
இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் இல்லங்களிலும், தலைமைச் செயலகத்தில் அவரின் அலுவலகத்திலும் சோதனை நடத்திவருகிறது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாஜக அரசு மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது. அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில், 2016 ஆம் ஆண்டு அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.
தலைமைச் செயலகம் என்பது மாநில அரசின் மூளை போன்ற முக்கியப் பகுதி. கூட்டுறவு - கூட்டாட்சி பேசிக்கொண்டே அந்தத் தலைமைச் செயலகத்தில் மத்தியக் காவல் படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் அலுவலகத்துக்குள்ளேயே ரெய்டு நடத்துமாறு வருமான வரித்துறையை இயக்கியது மத்திய அரசு.
இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது என்று, அன்றைய ஆட்சியாளர்கள் கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தபோது, அதைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன். எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம். எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம். மிகத் தவறான முன்னுதாரணங்களைத் தொடர்ந்து பாஜக உருவாக்கிவருகிறது.
தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன" என்று கண்டனத்தை தெரிவித்தார். இந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் நடைபெறும் சோதனைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவிப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் மோடி அரசின் யுத்தி வெற்றி பெறாது என்றும் காட்டமாக கூறியுள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், திமுக மீதான பாஜகவின் அரசியல் பழிவாங்கலை கண்டிக்கிறேன். விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில்அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பாஜகவின் அவநம்பிக்கையான செயல்கள் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுபற்றி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் மத்திய அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். அரசியல் பழிவாங்கலால், நமது ஜனநாயகத்திற்கு மாற்ற முடியாத சேதத்தை பாஜக ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
எனக்கு பாடம் எடுக்காதீங்க.. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி லட்சியம்.! அதிமுகவை அலறவிடும் அண்ணாமலை