கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள டிவி நடிகை சூரியாவுக்கு, போலி சாமியாருடன் தொடர்பு உள்ளதாகவும் அவர் மூலமாகவே கள்ளநோட்டு அச்சடித்து வந்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பண மதிப்புழப்பு நடவடிக்கைக்குப் பின்னும் நாடு முழுவதும் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படுவதாக தகவல் பரவியது. குறிப்பாக கேரளாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, கள்ள நோட்டு அடிக்கும் மற்றும் மாற்றும் கும்பலை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் முடுக்கிவிடப்பட்டனர்..

இந்த நிலையில் இடுக்கி மாவட்டம் அணைக்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் இருந்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ரவீந்திரன், லியோ, கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் ஒரு பெரிய பையில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்போது இந்த கள்ளநோட்டு கும்பலின் பின்னணியில் மலையாள டி.வி. நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து ரகசியம் காத்த போலீசார், கொல்லத்தில் வசிக்கும் அந்த நடிகையின் சொகுசு பங்களாவை கண்காணிக்க தொடங்கினார்கள். அப்போது அந்த பங்களாவுக்கு சந்தேகப்படும்படியாக அடிக்கடி ஆட்கள் சென்று வருவது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு அந்த பங்களாவுக்குள் நுழைந்த போலீசார், கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுவதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து மலையாள டிவி நடிகை சூரியா, அவரது தாயார் ரமா தேவி, தங்கை சுருதி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளநோட்டு அச்சடிப்பு கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது பட்றறியும், அவர்களுக்கு உதவியவர்கள் பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகை சூர்யாவுக்கு, கேரளாவைச் சேர்ந்த போலி சாமியார் ஒருவருடன் தொடர்பு இருக்கும் திடுக்கிடும் தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த சாமியார் மூலமே நடிகை சூர்யாவுக்கு கள்ள நோட்டு கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகே தனது வீட்டில் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், குறிப்பிடப்பட்ட அந்த போலீ சாமியார் பற்றியும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.