Make Kudaku district a separate state

கர்நாடக மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. இது கர்நாடகவின் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாக, தமிழ்நாட்டுக்கு வருகிறது. தமிழகத்தின் தர்மபுரி வழியாக நுழையும் காவிரி சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாபூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாக சென்று பூம்புகார் பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது.

அப்போது, காவிரி ஆறு பாயும் பகுதி எல்லாம் பசுமையாக காணப்பட்டது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு காவிரிப் பாசனம் பெற்றது. காவிரிப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளின் தொகை பல லட்சங்களைத் தாண்டும். ஆனால் இன்று... ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி என்று சொல்லப்பட்ட காவிரி ஆறு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கிட்டத்தட்ட வற்றிப்போகும் நதியாகவே காணப்படுகிறது.

இதற்கு காரணம், காவிரி ஆற்றில் 2 அணைகளைக் கட்டிக் கொண்டு தண்ணீரைத் தேக்கி வைத்து வருகிறது கர்நாடக அரசு. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் தமிழக விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. விவசாயிகள் வேதனையில் வாடுகின்றனர்.

ஆனால், நம்மூர் விவசாயிகள்தான் காவிரி நீருக்காக காத்திருக்கிறார்கள் என்றால், கர்நாடகவின் குடகு மாவட்டத்தை சேர்ந்த மக்களும் காவிரி நீருக்காக அம்மாநில அரசை கையேந்தி இருக்கிறார்களாம். விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் கிடைக்காததால், ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். 

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் இருந்து பூம்புகார் வரை காவிரி உயிர் நீரோட்ட காப்பு பயணம் மேற்கொள்ளும் குடகு தேசிய குழுவினர் தஞ்சை மாவட்டத்துக்கு அண்மையில் வந்தனர். இதன் பின்னர் தஞ்சையில் இருந்து அவர்கள் கும்பகோணத்துக்கு புறப்பட்டனர்.

கும்பகோணத்தில் கர்நாடக மாநிலம் குடகு பழங்குடி மக்கள் பயண ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மணி என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தற்போது காவிரி ஆறு பாலைவனமாக மாறி விட்டது. குடகு பகுதியில் காவிரி உருவாகிறது. அங்குதான் 180 டி.எம்.சி. தண்ணீர் வெளியேறுகிறது.

கர்நாடக அரசு அப்பகுதியில் 2 அணைகளைக் கட்டிக் கொண்டு, தண்ணீரை தேக்கி வைத்து எங்களுக்கே தண்ணீர் தர மறுக்கிறது. நாங்கள் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறோம்.

எங்கள் பகுதியான குடகு பகுதியை தனி மாநிலமாகவும் அல்லது புதுச்சேரி போன்று தனி அந்தஸ்து கொண்ட மாநிலமாக அறிவித்தால் தமிழகத்துக்கு தண்ணீர் தருவோம். கர்நாடக அரசு எங்கள் மக்களை ஏமாற்றி வருகிறது என்று பேராசிரியர் மணி கூறினார்.