ஆதாரை மாநில அரசு மானியத் திட்டங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் அடையாளங்களை மாநில அரசின் திட்டங்களில் பயன்படுத்த வகை செய்யும் ஆதார் திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. வங்கிக் கணக்கு தொடங்குவது மற்றம் செல்ஃபோன் சிம் கார்டுகள் வாங்க ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக பயன்படுத்த வகை செய்யப்பட்டிருந்தது.

 

அதனுடன் கூடுதலாக மாநில அரசு திட்டங்கள், மானியங்கள் சிலவற்றிற்கு ஆதார் அடையாள எண் மற்றும் விரல் ரேகை கண் விழி படலம் போன்ற அடையாளங்களை பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, மத்திய அரசின் 439 திட்டங்களுக்கு ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. 128 கோடி பேர் ஆதார் எண்ணை வைத்துள்ள நிலையில், மாநில அரசுகளும் ஆதாரைப் பயன்படுத்துவதன் மூலம், முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்று  மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.