mahendra sing dhoni working for srinivasan by lalith modi with evidence

இந்திய அணியில் கோடிக்கணக்கான ரூபாய் ஊதியத்தில் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி விளையாடி வந்தாலும், பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் என்.சீனிவாசனின் ‘இந்தியா சிமென்ட்ஸ்’ நிறுவனத்தில் ஊழியராகவே உள்ளார் என முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். 

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் தோனிக்கு வழங்கக்கூடிய ஊதிய விவரங்கள், நியமனக் கடிதம் ஆகியவற்றையும் வௌியிட்டு லலித்மோடி ‘கொளுத்தி’ போட்டுள்ளார். 

இதன் மூலம் லலித் மோடிக்கும், பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் என். சீனிவாசனுக்கும் இடையிலான மோதல் இன்னும் முற்றுப் பெறவில்ைல என்பதையே காட்டுகிறது.

‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் இந்தியா சிமென்ட்ஸ் உரிமையாளர் சீனிவாசன். இந்த இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் கடந்த 2012ம் ஆண்டு துணைத்தலைவராக தோனி நியமிக்கப்பட்டார். 

மேலும் சூதாட்ட சர்ச்சையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்கி தடைவிதிக்கப்பட்டது, இந்திய சிமென்ட்ஸ் நிறுவனத்தில் இருக்கும் தோனி குறித்தும் விமர்சிக்கப்பட்டது. 

இந்திய அணியில் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் ஊதியம், விளம்பர வருவாய் என அனைத்தும் கிடைத்தபோதிலும் சில ஆயிரங்களுக்காக தோனி இந்திய சிமென்ட்ஸ் நிறுவனத்தில் பணியில் உள்ளார். 

இது குறித்து முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி டுவிட்டரில் தோனியின் ஊதியம், நியமனக் கடிதம் உள்ளிட்டவற்றை வௌியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “ சீனிவாசனின் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் துணைத் தலைவராக தோனி இருக்கிறார்.

அவருக்கு அந்த நிறுவனத்தில் அடிப்படை ஊதியமாக ரூ.43 ஆயிரம், இதரபடிகள் ரூ.21 ஆயிரத்து 970 மற்றும் சிறப்பு ஊதியமாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 

மேலும் சென்னையில் தங்கி இருக்கும் போது சிறப்பு வீட்டுப்படியாக ரூ.20 ஆயிரத்து 400, சிறப்பு படியாக ரூ.8ஆயிரத்து 400, வேறு இடத்தில் இருந்தால் ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது. செய்தித்தாள், உள்ளிட்ட செலவுக்காக ரூ175, சிறப்பு படியாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் மட்டும்தான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் முன்னாள் பி.சி.சி.ஐ. அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படுகிறது. என்னுடைய கணிப்பு நிதி அமைச்சர் அருண் ஜெட்லிதான்.

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தோனி, ஏன் இந்தியா சிமென்ட்ஸ்சில் பணிபுரிய வேண்டும், எப்படி சீனிவாசனின் நிறுவனத்தில் பணியாற்ற தோனி ஒப்புக்கொண்டார் என்பது புதிராக இருக்கிறது. அவருக்கு இது போல் பல ஒப்பந்தங்கள் உள்ளன’’ எனத் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சீனிவாசன் இருக்கும்போது, ஐ.பி.எல். ஊழல் தொடர்பாக லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக லண்டனில் லலித் மோடி வசித்துவருகிறார்.