எங்கள் உத்தரவை மாகாராஷ்டிரா சபாநாயகர் மீற முடியாது: உச்ச நீதிமன்றம் காட்டம்!
மாகாராஷ்டிரா சபாநாயகர் எங்கள் உத்தரவை மீற முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
மகாராஷ்டிராவில் கடந்த 2022ஆம் ஆண்டு சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) கூட்டணி ஆட்சி அமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் உள்ளனர்.
ஒருங்கிணைந்த சிவசேனாவின் கொறடாவாக இருந்த எம்எல்ஏ சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ராகுல் நார்வேகரிடம் கடிதம் வழங்கியிருந்தார். அதேபோல் ஏக்நாட் ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்கரே அணியின் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கடிதம் வழங்கியது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, ஏக்நாட் ஷிண்டே உள்ளிட்டவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என கோரி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால், சபாநாயகர் தொடர்ந்து கால தாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இஸ்ரேலில் சிக்கித் தவித்த தமிழர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர்!
இந்த நிலையில், தகுதி நீக்க வழக்கு தொடர்பாக மாகாராஷ்டிரா சபாநாயகரை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், சபாநாயகரால் எங்கள் உத்தரவை மீற முடியாது என காட்டம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் மீற முடியாது என்று சபாநாயகருக்கு யாராவது அறிவுறுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியது. மேலும், சபாநாயகர் முடிவெடுக்கும் காலக்கெடு குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் அல்லது முழு செயல்முறையும் பயனற்றதாகிவிடும் என்று எரிச்சலுடன் தலைமை நீதிபதி கூறினார். சபாநாயகரின் காலக்கெடு திருப்திகரமாக இல்லை என்றால், 2 மாதங்களுக்குள் முடிவெடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பிற சிவசேனா எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க விவகாரத்தில் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.