14 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியை, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட்டணியில் சேராத போதும், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராஜ்தாக்கரே பிரச்சாரம் செய்து வந்தார். இது பாஜக மற்றும் சிவசேனா கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. அப்படி இருந்த போதிலும் அம்மாநிலத்தில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 

மகாராஷ்டிராவில் செல்வாக்குமிக்க கட்சிகளில் ஒன்றாக ராஜ்தாக்கரேவின் நவநிர்மான் சேனா கட்சி திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ராஜ்தாக்கரே அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பின் சோனியாவை ராஜ்தாக்ரே சந்தித்துள்ளார்.

 

இந்த சந்திப்பின் போது பாஜக – சிவசேனா கூட்டணியை முறியடிக்க ராஜ் தாக்கரேவுடன் கூட்டணி அவசியம். ஆகையால், சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைப்பது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனாவை நிறுவிய பால்தாக்கரேவின் சொந்த தம்பி மகனான ராஜ்தாக்கரே, சிவசேனாவை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் கூட்டணியில் சேர இருப்பது மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.