இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கிவிட்டது. அவர்களில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்த நிலையில், 8500 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 97,648 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3590 பேர் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், மூன்றாவதாக மற்றொரு அமைச்சருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சருமான அசோக் சவான் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர ஆஹாத் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சமூகநீதித்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தனஞ்செயா முண்டேவிற்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. 

அமைச்சர் தனஞ்செயா முண்டேவிற்கு தொண்டை வலி உள்ளிட்ட லேசான அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்  மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அமைச்சருடன் இருந்த மேலும் 5 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அமைச்சர் தனஞ்செயா முண்டேவின் செயலாளர், மீடியா ஆலோசகர் மற்றும் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 3 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.