நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24ம் தேதி துபாயில் உயிரிழந்தார். தொடக்கத்தில் மாரடைப்பு என கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாகவும் அவரது ரத்தத்தில் மது கலந்திருந்ததாகவும் தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து துபாயில் அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு ஸ்ரீதேவியின் உடல் போனி கபூர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் துபாயிலிருந்து மும்பைக்கு எடுத்துவரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவியின் உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு முழு அரசு மரியாதை வழங்கியது சில தரப்பினரிடையேயும் சமூக வலைதளங்களிலும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு விளக்கமளித்துள்ளது.

பொதுவாக குடியரசுத்தலைவர், முன்னாள் குடியரசுத்தலைவர்கள், பிரதமர், முன்னாள் பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில கேபினட் அமைச்சர்கள் ஆகியோரின் மறைவுக்குத்தான் அரசு மரியாதை வழங்கப்படும். ஆனால் தற்போது முழு அரசு மரியாதை செய்வது மாநில அரசுகளிடமே வழங்கப்பட்டுள்ளது.

தற்போது யாருக்கு முழு அரசு மரியாதை தரவேண்டும் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம். மறைந்த ஒருவருக்கு உள்ள புகழ் மற்றும் சமுதாயத்துக்கோ அல்லது அவர் சார்ந்த துறைக்கோ அவர் ஆற்றிய தொண்டுகளைக் கருத்தில் கொண்டு முழு அரசு மரியாதை தரலாம் என விதிகள் உள்ளன. இந்த நிலையில் ஒருவர் இறக்கும்போது அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கலாமா என்பது தொடர்பாக முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம். அவ்வாறு முடிவெடுத்த பின்னர் மரணமடைந்த ஒருவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு காவல்துறைக்கு வழங்கப்படும். 

அந்த வகையில் தான் ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.