மகாராஷ்டிராவில் மே 31ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதன் தாக்கல் சற்றும் குறையவில்லை. இந்தியாவில் இதுவரை 90, 927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2872 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  34 ,109 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் வரிசையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் குஜராத்தும், 3வது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 30,706 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1135ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,606 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு கொண்டுவந்தது. இதுவரை 3 கட்ட ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது, 3-வது கட்ட ஊரடங்கு 17-ம் தேதி (இன்று) முடிகிறது. 4-வது கட்ட  ஊரடங்கு தொடரும் என சூசகமாகத் தெரிவித்த பிரதமர் மோடி, ஆனால் வித்தியாசமாக இருக்கும் என அறிவித்திருந்தார். ஏற்கனவே ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை தொடரும் என மணிப்பூர், பஞ்சாப் மாநிலம் அறிவித்திருந்த நிலையில் தற்போது மகாராஷ்ராவும் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.